வட இந்தியாவில் கடந்த சில தினங்களாக கனமழை மிரட்டி வருகிறது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் பாய்ந்து வருகிறது. டெல்லியிலும் கனமழை பெய்து வருவதால் நாட்டின் தலைநகரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு:
இமாச்சல பிரதேசம், டெல்லியை போல உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் மழையின் தாக்கத்தால் உயிரிழப்பு கவலையை ஏற்படுத்தும் அளவில் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் மழையால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 17 பேரும், ஆறு, குளம் உள்பட நீரில் மூழ்கி 12 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 34 பேர் மழை காரணமாக ஒரே நாளில் உயிரிழந்தது அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தத்தளிக்கும் வட இந்தியா:
இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் எடவா, உன்னாவ், ஆக்ரா, பாலியா, ஜலாவ்ன், கான்பூர், டேகாத், கன்னாவ்ஜ், காசிபூர், மணிப்பூரி, பேரேலி மற்றும் கவுசாம்பி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் சிக்கித் தவித்ததை தொடர்ந்து, இமாச்சல், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், டெல்லி என வட இந்தியாவின் பல மாநிலங்களும் அடுத்தடுத்து வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றன.
அந்தந்த மாநிலங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், மழை அபாயம் உள்ள பிற மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Morning Headlines: ராகுல் காந்தி விவகாரம் முதல் மழை வெள்ளத்தில் மூழ்கிய டெல்லி வரை.. இன்றைய முக்கிய செய்திகள் இதோ..!
மேலும் படிக்க: ஐஐடியில் என்னதான் நடக்குது..? தொடரும் மர்மம்.. அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்ட மாணவர்!