புதுச்சேரியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி எட்டப்படவில்லை.  3.5 லட்சம் பேர் முதல் தவணையே போடாத நிலை இருந்து வருவதால் மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பரவ தொடங்கியது. இந்த தாக்கம் புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு 2,200 அளவுக்கு அதிகரித்தது. உயிரிழப்பு எண்ணிக்கையும் சராசரியாக 35 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். எனவே மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த  வேண்டும் என்று நிபுணர்கள் குழு மத்திய அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.




புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தது இல்லை இருப்பினு தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை முதலில் குறைவாக இருந்தது. விழிப்புணர்வு  பிரசாரம், சிறப்பு முகாம்கள், 24 மணி நேர முகாம்கள், நிறுவனங்களில் முகாம்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடுவது என தொடர்ச்சியாக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொண்டனர். இந்த நிலையில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் வந்தது. 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலம் என்ற இலக்கை அடைய சுகாதாரத்துறை அவ்வப்போது தடுப்பூசி திருவிழா நடத்தி வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி போட முயற்சி எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த இலக்கினை எட்ட முடியவில்லை.


துணைநிலை ஆளுநனர்  தமிழிசை சவுந்தரராஜன் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்கி வைத்தார். ஆனாலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட வரும் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால் பலர் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அதாவது, ஆரம்ப சுகாதார நிலையம் வரை வந்து விட்டு கட்டாய பரிசோதனைக்கு பயந்து தடுப்பூசி போட்டு கொள்ளாமல் திரும்பி விடுகின்றனர். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதெல்லாம் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.




புதுச்சேரியில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று வரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 40 ஆயிரத்து 655 பேரும், 2வது தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 45 ஆயிரத்து 659 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். இவர்களில் சிலர் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  இந்த வகையில் பார்த்தால் முதல் தவணை தடுப்பூசி போடாதவர்களே 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக இருப்பது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார். 




புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது: புதுச்சேரியில் 18 வயது நிரம்பிய சுமார் 10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை கணக்கில் கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம். கிட்டத்திட்ட 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இப்போது வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போட்டு வருகிறோம். ஆளுநர், முதலமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர். வருகிற 30ஆம் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்ற இலக்கினை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என  இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறினார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண