Delhi Coaching Center Flood: டெல்லியில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
பயிற்சி மையத்தில் வெள்ளம் - 3 பேர் உயிரிழப்பு:
மேற்கு டெல்லியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் திடீரென தண்ணீர் புகுந்ததால், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக் கொண்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவினரின் கடும் முயற்சிக்குப் பிறகு, 3 பேரின் உடல்களும் மீட்கப்படுள்ளன.
நடந்தது என்ன? - உடல்கள் மீட்பு:
தொடர் கனமழை காரணமாக, ராஜேந்திர நகரில் உள்ள ராவ்வின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. சனிக்கிழமை இரவு 7.19 மணியளவில் அடித்தளத்தில் மாணவர்கள் சிக்கியிருப்பதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், மீட்புப் பணிகளுக்கு உதவ ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணி தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டு மாணவிகளின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. மூன்றாவது மாணவரான ஒரு ஆணின் சடலமும் நள்ளிரவில் கண்டெடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, பயிற்சி மைய வெள்ளத்தில் சிக்காமல் சுமார் 30 பேர் அதிருஷ்டவசமாக வெளியேறி உயிர்பிழைத்துள்ளனர்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் - டெல்லி அமைச்சர்:
யுபிஎஸ்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக டெல்லி பொதுப்பணி அமைச்சர் அதிஷி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”டெல்லியில் மாலையில் பெய்த கனமழையால் விபத்து ஏற்பட்டதாகச் செய்தி வந்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார். டெல்லி தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதிய அவர், உடனடியாக மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 24 மணி நேரத்திற்குள் அறிக்கையும் கோரியுள்ளார்.
ஆம் ஆத்மி மீது பாஜக குற்றச்சாட்டு:
டெல்லியை சேர்ந்த பாஜக எம்.பி., பன்சுரி சுவராஜ் விபத்து பற்றி பேசுகையில், “இந்தப் பகுதியில் உள்ள சாக்கடைகள் சுத்தப்படுத்தப்பட்டு, மண் அள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு பாஜக தொண்டர்கள், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,துர்கேஷ் பதக்கிடம் பலமுறை கேட்டுக் கொண்டனர். அப்படிச் செய்திருந்தால், இந்த சோகம் நடந்திருக்காது” என குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த துர்கேஷ் பதக், “பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தான் கடந்த 15 ஆண்டுகளாக மாநகராட்சியில் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால், வடிகால்களை அவர்கள் சீரமைக்கவில்லை. வடிகால் அல்லது கழிவுநீர் கால்வாய் வெடித்ததால் தான், பயிற்சி மையத்தில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிகிறது” என விளக்கமளித்துள்ளார்.
மாணவர்கள் போராட்டம்:
இதனிடையே, விபத்து நடந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் விடிய விடிய சாலையில் அமைந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.