மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பஞ்சாப், அரியானா விவசாயிகள் நாட்டின் தலைநகரான டெல்லியின் எல்லையில் கடந்த ஓராண்டுகளாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்தனர்.
அவர்களின் போராட்டத்தின் பலனாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பால் விவசாயிகளின் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சங்கங்கள் அளித்த பேட்டியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் என்ற பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு வெற்றி என்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பபெற்றுள்ளதால், விவசாயிகளும் தங்களது போராட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, வேளாண் சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருட்கள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு ( அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய சட்டங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்தாண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்த சட்டங்களுக்கு தொடக்கம் முதல் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயிகள் இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகளுடன் தமிழ்நாடு, பீகார், ஆந்திரா என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்கள் உள்பட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 10க்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்