நாளுக்குநாள் அதிகரிக்கும் கூட்டம் :




கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. இதையடுத்து பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி பொதுமக்களுக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் 27-ஆம் தேதி வரை முதல் 11 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 30 நாட்களில்  மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால், பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு, உடனடியாக வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, பக்தர்கள் நீண்ட நேரம் கோயிலில் தங்குவதைத் தவிர்க்க தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வழக்கமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.  மேலும், வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவே, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்தது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்களை தரிசிக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மதியம் மற்றும் இரவு நேரங்களில் தரிசன நேரம் மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல், நெய்யபிஷேக நேரத்தையும் ஒன்றே முக்கால் மணிநேரம் அதிகரித்தனர்.



தொடர்ந்து, சன்னிதானத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டால், பம்பா மற்றும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் ஒரு  பக்கத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  சாரம்குத்தி ஆலத்தில் உள்ள வரிசை வளாகங்களை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெய்நிகர் வரிசை வழியாக தினசரி முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 90,000 ஆக நிர்ணயிக்கப்பட்டும் வருவதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது.


மேலும், சன்னிதானத்தில் உள்ள 18-ஆம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை வேகமாக மேலே ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாளை ஆன்லைன் தரிசனம் இல்லை


இதனிடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (டிசம்பர் 19 ) ஆன்லைன் தரிசனம் இல்லை என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட  எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், அன்றைய நாளில் முன்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


அதேபோன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.