உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள குர்தி கிராமத்தில் பாபுஜியின் இறுதிச் சடங்கு மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. கூட்டத்தில் இருந்த ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் கதறி அழுதனர். இறந்த பாபுஜிக்காக கோயில் அர்ச்சகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர். ஆனால், பிரார்த்தனை சத்தத்தை விட மக்களின் கதறல் சத்தமே மேலோங்கியது.


யார் இந்த பாபுஜி… மக்களுக்காக இவர் என்ன செய்தார்?


நீங்கள் நினைப்பது போல் பாபுஜி ஊர் தலைவர் அல்ல. அவ்வளவு ஏன்! அது மனிதரே அல்ல. குர்தி கிராமத்தில் அனைத்து மக்களும் பாசத்துடன் கவனித்து வந்த காளை மாட்டின் பெயர் தான் பாபுஜி. ஆனால், அதை ஒரு விலங்காக பாவிக்காமல் சக மனிதரை போல்… இல்லை இல்லை அதற்கும் மேலாக மக்கள் மதித்து வருகின்றனர்.


20 ஆண்டுகளாக குர்தி கிராமத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த பாபுஜி காளை கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி காலமானது. சுதந்திர தினத்தன்று நாடே மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திழைத்துக் கொண்டிருக்க பாபுஜி காளையின் மறைவால் குர்தி கிராமம் சோகத்தில் மூழ்கியது.



பாபுஜி காளையுடன் சிறுமி


 


காளையை குடும்ப உறுப்பினராக கருதிய மக்கள்:


காளையின் மறைவை தொடர்ந்து அதற்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. அதுபோல், ரசம் பாக்தி என்ற சடங்கும் காளைக்கு செய்யப்பட்டது. ரசம் பாக்தி என்ற சடங்கு பஞ்சாப், ராஜஸ்தானி, அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குடும்பத்தின் மூத்த உறுப்பினர், குடும்பத்தலைவர் இறந்தால் செய்யப்படும் சடங்காகும். இதை பாபுஜி காளைக்கும் குர்தி கிராம மக்கள் செய்ததன் மூலம், அதை தங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினராகவே கருதி வந்தனர் என்பதை உணர முடிகிறது.


”பாபுஜி இயற்கை மரணம் அடைந்தார். அவரை எங்கள் குடும்ப உறுப்பினராகவே நாங்கள் கருதுகிறோம்” என்று சொல்கிறார் குர்தி கிராமவாசியான மணிஷ் தியாகி.


இறுதி சடங்குக்கு நிதியை வாரி வழங்கிய கிராம மக்கள்:


பாபுஜி காளையின் இறுதிச் சடங்கிற்காக கிராமம் முழுவதும் நிதி திரட்டினர். மக்களும் தங்களின் பாசமான உறவினராக கருதி வந்த காளைக்காக நிதியை வாரி வழங்கினர். அதன் மூலம், கிராம மக்களுக்கு விருந்து கொடுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது. இளைஞர்கள் சிலர் பாபுஜி காளையுடன் தாங்கள் நிற்பதை போல், அதன் படத்துடன் தங்கள் படத்தை போட்டு போட்டோஷாப் செய்து பேனர்களை கிராமத்தில் நிறுவி இருந்தனர்.


”இந்த பூஜை சடங்குகள் அமைதிக்காகவும், மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் நடத்தப்படுவதாக கூறுகிறார்” அர்ச்சகர் நரேஷ் பண்டிட்.


யாரையும் காயப்படுத்தாத காளை:


காளை பாபுஜி குறித்து குர்தி கிராமத்தை சேர்ந்த போலா தியாகி கூறுகையில், “அது யாரையும் காயப்படுத்தியது இல்லை. குழந்தைகள் அதனுடன் விளையாடுவதை விரும்புவார்கள்” என்றார். குர்தி கிராமத்துக்கு கிடைத்த தெய்வீக பரிசு பாபுஜி காளை என மக்கள் நெகிழ்கின்றனர். பாபுஜி காளை இளம் வயதில் கோயில் அருகே நடமாடுவதை சிலர் கண்டுள்ளனர். கிராம மக்கள் பாபுஜியை நந்தி… அதாவது சிவனின் காளை என்று அழைக்கின்றனர்.