14 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாள் இன்று. ஆம், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்திய வரலாற்றில் இந்த கொடூர தாக்குதல் மறைக்க முடியாத, மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.
டாப் 10 முக்கிய தகவல்கள் :
- இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்த 10 பேர் அனுப்பப்பட்டனர்.
- இதனை முதலில் மறுத்த பாகிஸ்தான், அதன்பின் இந்த தாக்குதலுக்கு திட்டமானது பாதி பாகிஸ்தான் நாட்டில் தீட்டப்பட்டதாக ஒப்புகொண்டது. அதேபோல், அஜ்மல் தங்களது குடிமகன் என்றும் ஒத்துகொண்டது.
- மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் மட்டும்தான் மும்பை பாதுகாப்பு படையினரால் உயிரோடு பிடிக்கப்பட்டார்.
- 2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப், கடந்த 2012 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
- அஜ்மலை தவிர இந்த பயங்கரவாத தாக்குதலில் மீதமிருந்த 9 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே, கூடுதல் போலீஸ் ஆணையர் அசோக் காம்தே, மூத்த காவல்துறை அதிகாரி விஜய் சலாஸ்கர் ஆகியோர் உயிரிழந்தனர். அதேபோல், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திற்கே சென்று தாக்குதல் நடத்திய என்.எஸ்.ஜி. கமாண்டோ படையை சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வீரமரணம் அடைந்தார்.
- இந்த தாக்குதல்கள் 2008ம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை 29 வரை நீடித்தது. அதாவது 60 மணிவரை இந்த தாக்குதல் நடைபெற்றது.
- தாக்குதல்கள் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் ஏற்பட்டது: சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம் ,மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுகம பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது.
- தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 60 மணி நேரம் நடைபெற்ற இந்த தாக்குதலை இந்திய ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ததால் ஊடக நெறிமுறைகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.