Uttarpradesh : உத்தர பிரதேசத்தில் நடந்த ஃபேஷன் ஷோவின் மாடல் அழகி மீது இரும்பு தூண் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா திரைப்பட நகரில் உள்ள ஸ்டூடியோவில் ஃபேஷன் ஷோ ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாடல் அழகிகள் விதிவிதமான ஆடைகள் அணிந்து ரேம்ப் வாக் செய்து வந்தனர். வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப் வாக் சென்ற போது, எதிர்பாராத விதமாக அவர் மீது இரும்பு தூண் ஒன்று மேலிருந்து விழுந்தது. இதில் வன்சிகா சோப்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின் விளக்குக்காக அந்த இரும்பு தூண் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் வேறு ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
உடனே அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாடல் அழகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அங்கு நடைபெறவிருந்த ஃபேஷன் ஷோ ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ”விபத்தில் உயிரிழந்த மாடல் அழகி வன்சிகா சோப்ராவின் (24) உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஃபேஷன் ஷோவிற்கு அனுமதி கொடுக்கவில்லை. எனவே ஃபேஷன் ஷோ ஏற்பாட்டாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடன் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.
நொய்டாவில் உ.பி. அரசு மிகப்பெரிய திரைப்பட நகரை உருவாக்கி இருக்கிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தற்போது உத்தர பிரதேச பிரபல திரைப்பட நகரில் மாடல் அழகி மீது இரும்பு தூண் ஒன்று விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க