அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அரசியல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. 


கடந்த இரண்டு தேர்தல்களை காட்டிலும் இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ள புதிய கூட்டணி ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களில் சரிகட்ட பாஜக முயற்சி செய்து வருகிறது.


"தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும்"


குறிப்பாக, தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் பலத்துடன் வெற்றிபெற பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. பயணத்தின்போது அவர் கூறிய கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


"எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும்" என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தால் (திமுக) தமிழ்நாட்டை சேர்ந்த சேர்ந்த காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகிய இருவருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அமித் ஷா கூறினார்" என்றார்.


"பிரதமர் வேட்பாளர்களாகும் தமிழிசை, முருகன்"


இதற்கு பதிலடி தரும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் விழாவில் பேசியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மகிழ்ச்சி. ஆனால், அவரின் உள்நோக்கம் புரியவில்லை. மோடி மீது என்ன கோபம் என தெரியவில்லை. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வேட்பாளராக தமிழிசை, முருகன் அறிவிக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.


தமிழர்களை பிரதமராகாமல் தடுத்தது திமுக  என அமித் ஷா கூறியுள்ளாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், "வெளிப்படையாக சொன்னால் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும்" என்றார்.


எதிர்காலத்தில், தமிழர் ஒரு பிரதமராக வருவார் என அமித் ஷா தெரிவித்திருப்பதும் 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தமிழிசை, முருகன் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஸ்டாலின் பேசியிருப்பதும் தமிழ்நாடு அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.


ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இருந்து பிரதமர் மோடி போட்டியிடுவார் என பல்வேறு விதமான செய்திகள் வெளியாகின. ஒரு வேளை, இதை மனதில் வைத்தே தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என அமித் ஷா கூறியிருப்பாரோ என பல்வேறு ஊகங்கள் உலா வருகின்றன.


அதுமட்டும் இன்றி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலில், தென் சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட பாஜக மேலிடம் விரும்புவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.