இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சுமத்தியிருப்பது விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிஜ்பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். இருப்பினும், அவர் கைது செய்யப்படவில்லை. 


மல்யுத்த வீரர்கள் போராட்டம்:


மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர்களுடன் மத்திய அரசின் சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான வழக்கின் விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.


இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இருப்பினும், பிரிஜ் பூஷன்சிங் ஏன் கைது செய்யப்படவில்லை என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


"அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன்"


இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரிஜ்பூஷன் சிங், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.


மல்யுத்த வீரர்களின் பெயரை குறிப்படாமல் கவிதை ஒன்றை வாசித்த பிரிஜ் பூஷன் சிங், "சில சமயம் கண்ணீரையும், சில சமயங்களில் சோகத்தையும், சில சமயங்களில் விஷத்தையும் குடிக்கிறீர்கள். அப்போதுதான், சமூகத்தில் வாழ முடியும். இது என் அன்புக்கு கிடைத்த வெகுமதி. என்னை விசுவாசமற்றவர் என்கிறார்கள். பிரபலம் அடைவதற்கே என்னை பற்றி பேசுகிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் கைசர்கஞ்ச் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். அடுத்த ஆண்டு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்றார்.


காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சி காலத்தில், ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, ​​இந்தியாவின் 78,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது. 1962இல் இந்தியாவை தாக்கிய சீனா, இன்னும் 33,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலத்தை வைத்திருக்கிறது. 


மோடியை புகழ்ந்து தள்ளிய பிரிஜ் பூஷன் சிங்:


1972இல், 92,000 பாகிஸ்தான் போர்க் கைதிகள் (POW) இந்தியாவால் சிறைபிடிக்கப்பட்டனர். பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட நிலத்தை (POWக்கு ஈடாக) திரும்பப் பெற இது ஒரு வாய்ப்பு. காங்கிரஸுக்குப் பதிலாக வலிமையான பிரதமர் இருந்திருந்தால், பிரதமர் மோடி இருந்திருந்தால், நிச்சயம் திரும்பப் பெற்றிருப்பார்" என்றார்.


பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய அவர், "காஷ்மீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்ததற்காகவும் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதற்காகவும், சாலைகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தயாரிப்புகளை கட்டுவதில் விரைவான முன்னேற்றத்திற்காகவும் மோடியை பாராட்டுகிறேன்" என்றார்.


பாரத் மாதா கி ஜே முழுக்கத்துடன் தனது உரையை பிரிஜ் பூஷன் சிங் முடித்து கொண்டார்.