ஒடிசாவில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய மதுபானத்தைக் குடித்துவிட்டு 24 யானைகள் ஆழ்ந்த உறக்கத்தில் வனப்பகுதியில் கிடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வனப்பகுதியில் ஆழ்ந்த உறக்கம்
ஒடிசா மாநிலம், கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய மதுபானமான மஹூவா தயாரிக்கும் முறை வழக்கத்தில் உள்ளது. பெரிய தொட்டிகளில் மஹுவா பூக்கள், தண்ணீரை நிரப்பி நொதிக்க வைத்து இந்த பானத்தை தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள ஷிலிபாடா முந்திரி காடுகளில் பானைகளில் நிரப்பி நொதிக்க வைக்கப்பட்டிருந்த மஹூவா பானத்தை ஒன்பது ஆண் யானைகள், ஆறு பெண் யானைகள் மற்றும் ஒன்பது யானைக் கன்றுகள் அடங்கிய யானைக்கூட்டம் ஒன்று அருந்திவிட்டு, போதையில் ஆழ்ந்து தூங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"காலை 6 மணியளவில் மஹுவா தயாரிப்பதற்காக நாங்கள் காட்டுக்குள் சென்றோம், பானைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, காய்ச்சிய தண்ணீரைக் காணவில்லை. யானைகள் தூங்குவதையும் நாங்கள் கண்டோம். அவை காய்ச்சிய பானத்தை குடித்துவிட்டன," என்று நரியா சேத்தி என்ற கிராமவாசி பிடிஐ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மேளம் அடித்து எழுப்பிய வன அலுவலர்கள்
இந்நிலையில்,கிராம மக்கள் யானைகளை எழுப்ப முயன்றும் பலனின்றி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்
"அந்த மதுபானம் பதப்படுத்தப்படவில்லை. விலங்குகளை எழுப்ப முயற்சித்தோம், ஆனால் எங்கள் முயற்சி தோல்வியடைந்தது. அதன் பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது," என்றும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், மேளம் அடித்து இந்த யானைக் கூட்டத்தை எழுப்பியுள்ளனர். அதன் பின்னரே விழித்தெழுந்து வனப்பகுதிக்குள் யானைக்கூட்டம் சென்றதாக வனக்காப்பாளர் காசிராம் பத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த யானைகள் பாரம்பரிய மதுபானத்தை உட்கொண்டதா அல்லது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததா என்பது குறித்து தெரியவில்லை என்றும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,ஏற்கெனவே உடைந்த பானைகளுக்கு அருகில் பல்வேறு இடங்களில் யானைகள் போதையில் தூங்குவதைக் கண்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பழங்குடியினரின் பாரம்பரிய மஹூவா பானம்
மஹுவா என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான உள்நாட்டு மதுபானம் ஆகும். உலகில் பூக்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரே மதுபானமான மஹூவா அறியப்படுகிறது. மத்தியப் பிரதேச அரசு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஹுவாவை பாரம்பரிய மதுபானமாக அறிவித்தது. மேலும் அம்மாநில அரசு சட்டத்திருத்தம் செய்து மஹுவா பூக்களின் சேகரிப்பு, விற்பனை மற்றும் போக்குவரத்து சட்டபூர்வமானது.
பழங்குடியின ஆண்களும் பெண்களும் மரத்தையும் மஹுவா பானத்தையும் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, பழங்குடியின சமூகம் இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் முதன்மையாக வளரும் மஹுவா மரத்தை சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மஹூவா மரத்தின் பட்டை, விதைகள், பூக்கள் என அனைத்துமே விற்பனை செய்யப்படுகிறது.