வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மேகம் வெடிப்பால் கனமழை கொட்டியது. தொடர்ந்து, சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நீர்மட்டம் திடீரென 15-20 அடி உயரத்திற்கு உயர்ந்தது. இதனால்,  லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளாத்தாக்குப் பகுதியில் இருந்த ராணுவ வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாகவும், 23 ராணுவ வீரர்கள் காணமால் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.






மேகவெடிப்பால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக சிங்டம் பகுதியி இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.






வெள்ள பாதிப்பு தொடர்பாக பேசிய பாஜக தலைவர் உக்யென் ஷெரிங் கியாட்சோ பூட்டியா, ”சிங்டாமில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் பொது சொத்துக்கள் சேதமடந்துள்ளன. சிலர் காணாமல் போனதாக தகவல் உள்ளது. அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என குறிப்பிட்டார்.






தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.