ஐயப்பனுக்கு கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து,  41 நாட்கள் விரதமிருந்து, மார்கழியில் மலைக்கு செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் 60 நாட்கள் கடுமையாக விரதமிருந்து மகரஜோதி காண செல்வர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,00,969 பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் பக்தர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்தனர்.


அலைமோதும் பக்தர்கள் கூட்டம்


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமீப நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது. 

விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வெள்ளம் போல திரண்டிருந்தது. அப்பாச்சி மேடு முதல் சன்னிதானம் வரை, பக்தர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில்  காத்திருந்து 18 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,00,969 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.


204.30 கோடி வருமானம் 


இந்நிலையில் சபரி மலையில் 39 நாட்களில் 31 லட்சத்து 43 ஆயிரத்து 163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காணிக்கையாக மட்டும் 63 கோடியே 89 லட்சம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவசம் போர்டு அன்னதான மண்டபம் மூலம் 7 லட்சத்து 25 ஆயிரத்து 49 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. மேலும் 39 நாட்களில் 204.30 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இலவச WIFI திட்டம்


கேரள மாநிலம் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு செல்லும் பக்தர்கள், தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் உறவினர்கள் உள்ளிட்டோரை செல்போன் வழியாக தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், பக்தர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக தேவஸ்வம் போர்டு இலவச WIFI திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


ஒரு பக்தர் முதல் அரை மணி நேரத்திற்கு இலவசமாக WIFI ஐ பயன்படுத்தலாம். அந்த அரை மணி நேரத்திற்கு பிறகு 9 ரூபாய் கட்டணம் செலுத்தி 1 GB டேட்டாவை பயன்படுத்தலாம். மேலும், 99 ரூபாய் திட்டத்தின் மூலம் மாதம் முழுவதும் தினசரி 2.5 GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரையிலான 27 மையங்களில் இலவச WIFI வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.