ரயில் டிராக்கில் கால்நடைகளின் நடமாட்டம் காரணமாக அக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாள்களில் 200 ரயில்களும் இந்தாண்டு முழுவதும் 4,000 ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டிருப்பது தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.


இதில், அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட மும்பை - அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாதம் மட்டும் இந்த குறிப்பிட்ட ரயில் மூன்று முறை கால்நடையின் மீது மோதியுள்ளது. இதன் காரணமாக, ரயிலின் முன் பக்கம் சேதம் அடைந்தது.


ரயில் தண்டவாளத்தைச் சுற்றி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடிய பல பகுதிகளை ரயில்வே தடுப்பு போட்டுள்ளது. ஆனால், ஒருபுறம் வீடுகள் மற்றும் மறுபுறம் பண்ணைகள் கொண்ட குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் நீண்ட தூரத்தை மூடுவது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


"கால்நடை மோதல்களை குறைக்க ரயில்வே அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஒரு முறை கண்டறியப்பட்ட இடங்களை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இதுபோன்ற தளங்களுக்குச் சென்று அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிகிறோம். சில நேரங்களில், சில காரணங்கள் உள்ளன.


ஆனால், நேரடியான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், எங்கள் குழுக்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று, பஞ்சாயத்து தலைவர்களுடன் தொடர்பு கொள்கின்றன. மோதல்களின் பின்விளைவுகள் குறித்து கிராம மக்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்" என்று ரயில்வேயின் தகவல் மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் அமிதாப் ஷர்மா கூறினார்.


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வல்சாத்தில் உள்ள அதுல் ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு மாடு அதிவேக ரயிலின் முன் வந்தது. அப்போது மாடு ரயிலில் அடிபட்டது. மாடு மோதியதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் இன்று காலை 8.17 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.


இந்த விபத்துக்கு பிறகு, வந்தே பாரத் ரயில் அதுல் ரயில் நிலையத்தில் சுமார் 26 நிமிடங்கள் நின்ற நிலையில், 8.43 மணிக்கு விபத்து நடந்த பகுதியிலிருந்து புறப்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியும் பிரிக்கப்பட்டது.


இந்த விபத்தின்போது, வந்தே பாரத் விரைவு ரயிலில் குடிநீர் குழாய் சேதமடைந்து, குடிநீர் விநியோகமுமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, அக்டோபர் 6ம் தேதி குஜராத்தில் இருந்து மும்பைக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது வந்தே பாரத் ரயில் விபத்தில் சிக்கியது. ரயிலின் வேகம் அதிகமாக இருந்ததால், திடீரென 4 எருமை மாடுகள் தண்டவாளத்தில் வந்தன. இந்த விபத்தை அடுத்து ரயிலின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.