Rajasthan Rain:  ராஜஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


ராஜஸ்தான் - 20 பேர் உயிரிழப்பு:


ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் கனமழை பாதிப்புகளால், நேற்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக ஜெய்ப்பூர், கரௌலி, சவாய் மாதோபூர், தௌசா ஆகிய இடங்களில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால்,  ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் ரூரல், தௌசா, கரௌலி, சவாய் மாதோபூர், கங்காபூர் மற்றும் பரத்பூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானின்  சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


உயிரிழந்தோர் விவரம்:


கனமழைக்கு இதுவரை உயிரிழந்தோர் விவரம், 



  • கனமழைக்கு மத்தியில் ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணையில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தேடுதல் பணி மேற்கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும் ஒருவரது உடல் கூட மீட்கப்படவில்லை

  • பாரத்பூர் மாவட்டம் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள பங்கங்கா ஆற்றில் மூழ்கி ஏழு சிறுவர்கள் உயிரிழந்தனர்

  • ஜெய்ப்பூர் கிராமத்தின் ஃபாகியில் உள்ள மாஷி ஆற்றின் கரையில் மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டதில் சீதாராம் (21) மற்றும் தேஷ்ராஜ் என்ற இரு இளைஞர்கள் இறந்தனர்.

  • பன்வாரி (25) எனும் நபர் மாதோராஜ்புராவில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தார்

  • சதாம் (32) எனும் நபர் டூடுவில் உள்ள அணைக்கட்டில் விழுந்து இறந்தார்

  • பீவாரைச் சேர்ந்த அசோக்குமார் (23) குளத்தில் தவறி விழுந்து இறந்தார்

  • பக்ரியாவாஸ் பகுதியைச் சேர்ந்த பப்லு (16) எனும் சிறுவன் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்தான்

  • கெக்ரி பகுதியில் குல்கான் எனும் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்

  • கரௌலியில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர்

  • பராபுரா கிராமத்தில் 12 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

  • பன்ஸ்வாராவில், தௌசாவைச் சேர்ந்த நர்சிங் மாணவர் விகாஸ் சர்மா, கடேலியா நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்தார்


முதலமைச்சர் கோரிக்கை:


இதனிடையே, “மாநில மக்கள் அனைவரும் நீர்நிலைகள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், மழையின் போது மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு இடையே உள்ள தூரத்தை பராமரிக்கவும், மழையின் போது கட்டிடங்களில் கட்டப்பட்ட அடித்தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும், எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என முதலமைச்சர் பஜன் லால் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு,  பேரிடர் மேலாண்மை தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.