2026 தேர்தலை குறி வைத்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில், இந்த தேர்தலில் முக்கிய கட்சியாகவும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கட்சியாகவும் இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் 2-வது மாநில மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு“
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி(25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி என கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பெரும் கூட்டத்தை கூட்டி, மற்ற கட்சிகளுக்கு மிரட்சியை ஏற்படுத்தியிருந்தார் விஜய். இந்த நிலையில், தற்போது மதுரையில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது தென் மாவட்டங்களை குறி வைத்தே முக்கிய கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில், தவெக-வும் மதுரையில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்த முறை, தென் மாவட்டங்களில் பிரதான கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியான நிலை உருவாகும் என தெரிகிறது.
முதல் மாநில மாநாடு போலவே, இந்த மாநாட்டையும் விஜய் வெற்றிகரமாக நடத்திவிட்டால், அது நிச்சயம் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தவெக சிறிது சறுக்கிய நிலையில், அக்கட்சியின் செல்வாக்கு அவ்வளவு தானா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மதுரை மாநாட்டில் முழு கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ள தமிழக வெற்றிக் கழகம். என்ன செய்யப்போகிறது தவெக.. பொறுத்திருந்து பார்ப்போம்.