உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் நகரில் தன்னுடைய மகளை கடத்தி சென்றதாக ஒருவர் மீது அவரது தந்தை புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 


இது குறித்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதிகள் சுனித் குமார் மற்றும் சையத் வைஸ் மியா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, அந்த பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனது தந்தையின் வீட்டை விட்டு வெளியேறி தற்போது அந்த நபருடன் வசித்து வருவது தெரிய வந்தது.


அந்த பெண்ணும், ஆணும் தாங்கள் வயது வந்தவர்கள் என்பதை நிரூபிக்க, உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்தனர். 


நீதிமன்றத்தில் அந்த தம்பதி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திவாகர் சுக்லா, "ஆணும் பெண்ணும் வயது வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒன்றாக வாழ உரிமை உள்ளது. எனவே, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 366இன் கீழ் உள்ள குற்றங்களை இந்த வழக்கில் நிரூபிக்க முடியாது" என வாதிட்டார்.


இதை தொடர்ந்து, மனுதாரர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


சமீபத்தில், லிவ் இன் உறவுகள் தனிநபர் சார்ந்தது. அதை இரு தனிநபர்களின் சுதந்திரம் சார்ந்தே பார்க்க வேண்டும். அதில் சமூகப் பார்வையை திணிக்கக் கூடாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


நீதிபதிகள் ப்ரீதின்கர் திவாகர், அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது. இருவெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரு ஜோடிகள் லிவ் இன் உறவில் இருக்க பெண்ணின் வீட்டார் இடையூறு செய்வதாக நீதிமன்றத்தை நாடினர்.


முன்னதாக இரு தரப்பினரும் காவல்துறையை நாடியுள்ளனர். காவல்துறை சார்பில் எவ்வித உதவியும் செய்யப்படாத நிலையில் அந்த ஜோடி நீதிமன்றத்தை நாடின.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "அரசியல் சாசன சட்டப் பிரிவு 21 தனிநபர் சுதந்திரம் வழங்கியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் லிவ் இன் உறவுகள் என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.


அத்தகைய உறவை தனிநபரைச் சார்ந்து தனிநபரின் உரிமைக்கு உட்படுத்தியே பார்க்க வேண்டுமே தவிர அதனை சமூகத்தின் பார்வையில் பார்க்கக் கூடாது. சமூகம் கலாச்சாரக் காவல் பார்வையில் இவ்விவகாரத்தை அணுகக் கூடாது" என்று தெரிவித்தனர். 


அண்மையில் இதே போன்றதொரு வழக்கு பஞ்சாப் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "ஒவ்வொரு தனிமனிதனும் அவரது விருப்பப்படி அவரது துணையுடன் திருமணம் செய்து கொண்டு சட்டமுறைப்படி வாழ்வதும் அல்லது லிவ் இன் உறவில் வாழ்வதும் அவரவர் உரிமை.


இந்த முடிவில் அவரது குடும்பத்தினர் கூட தலையிட முடியாது. உச்ச நீதிமன்றமே இதனை அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் இந்த உறவில் எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை. அதனால் இந்த உறவில் இருப்பவர்களுக்கு, எல்லோருக்கும் இருப்பது போலவே சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.


இந்தியாவில் இந்த உறவுமுறை இப்போது பெருநகரங்களையும் கடந்தும் பிரபலம் அடைந்து வருகிறது" என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.