இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) என்பது சுதந்திரமான தனியார் ஆய்வு நிறுவனமாகும். நாட்டின் பொருளாதாரம், வணிகம், தனியார் நிறுவனங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.


இந்தியாவில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து சிஎம்ஐஇ தற்போது தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் முந்தைய மாதம் பதிவான 8 சதவீதத்தில் இருந்து 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.


நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் பதிவான 8.96 சதவீதத்தில் இருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து 7.44 சதவீதமாக சரிந்தது.


இது தொடர்பாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் பேசுகையில், "வேலையின்மை விகிதத்தின் உயர்வு வெளியே தோன்றுவது போல் மோசமாக இல்லை. ஏனெனில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் உயர்ந்ததை தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.


டிசம்பரில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 40.48 சதவீதமாக உயர்ந்தது. இது, 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, வேலைவாய்ப்பு விகிதம் டிசம்பரில் 37.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 2022 க்குப் பிறகு அதிகபட்ச அளவில் பதிவாகியுள்ளது" என்றார்.


அதிக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், பணி சந்தையில் நுழையும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது.


சிஎம்ஐஇ தரவுகளின்படி, இந்திய மாநிலங்களிலேயே ஹரியானாவில்தான் அதிகபட்ச வேலையின்மை விகிதம் பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதத்தில், ஹரியானாவில் 37.4 சதவிகிக வேலையின்மை விகிதம் பதிவாகியுள்ளது.


அதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 28.5% வேலையின்மை விகிதம் மற்றும் டெல்லியில் 20.8% பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஒடிசாவில் வேலையின்மை விகிதம் 0.9% ஆகவும், குஜராத்தில் 2.3% ஆகவும், கர்நாடகாவில் 2.5% ஆகவும் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, வேலையின்மை விகிதம் 4.1 ஆக பதிவாகியுள்ளது.


"உத்தரபிரதேசத்தில் 37 லட்சம் பேர் கிரேடு 'சி' வேலைகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். 40,000 அக்னிவீர் வேலைக்காக 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 'நாங்கள் விரக்தியில் இருக்கிறோம், எங்களுக்கு வேறு வழியில்லை' என்ற இளைஞர்களின் வேதனைக் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்கிறதா?


8 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி அரசு ஏற்படுத்தியது இதுதான்: வேலை இல்லை. வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உள்ளது (தவறான தரவுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது).


நிதி அமைச்சகத்தின் செப்டம்பர் மாத மதிப்பாய்வில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை!" என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.