ஆன்லைனில் நாம் வாங்கும் பொருட்களுக்கு சலுகைகள், தள்ளுபடிகள் தருவது நம் அனைவருக்குமே விருப்பமானதுதான்.நாம் நேரில் சென்று வாங்கினால் கூட அவ்வளவு சிறந்த சலுகைகள் கிடைக்காது என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. குறிப்பாக ஸ்விக்கி சோமாட்டோ என உணவு வர்த்தக ஆப்களில் தரும் கூப்பன்கள் எப்பவுமே தனித்துவமானதாக இருக்கும். அதிலும் சோமாட்டோ ஆஃபர்கள் வழியாக தரமான அதிக விலை உணவுகளை ஆஃபர்கள் மூலம் மிகக் குறைந்த விலையில் பெறலாம். இருப்பினும், இந்த மார்க்கெட்டிங் உத்திகள் அடிக்கடி தவறாகப் போகலாம் என்பதை சமீபத்திய ஒரு நிகழ்வின் வழியாக அறிந்து கொள்ளலாம். என்ன நடந்தது? விரிவாகப் பார்ப்போம்... பூபேந்திரா என்கிற சோமாட்டோ வாடிக்கையாளர் ஒருவர், ஆன்லைன் தளங்கள் தங்கள் சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களை எவ்வாறு வியூகமாக்குகின்றன என்பதை விளக்கும் இடுகையை அண்மையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பூபேந்திரா சோமாட்டோவின் ஒரு ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார், அதில் இரண்டு குலாப் ஜாமூன்களின் விலை ரூ. 400 என்றும்; அதில், 80 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விலை வெறும் ரூ. 80 மட்டுமே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 200 கிராம் கேரட் அல்வாவிற்கும் இதுவே இருந்தது. அது முதலில் ரூ. 600 என்றும், 80 சதவிகித தள்ளுபடிக்குப் பிறகு அது ரூ 120க்கு விற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பதிவில் கூடுதலாகக் கிண்டலாக ஒரு குறிப்பைச் சேர்த்த பூபேந்திரா, "2 குலாப் ஜாமூனுக்கு 400 ரூபாய், 3000 ரூபாய் கிலோ கஜர் ஹல்வா; அதன் பிறகு அதில் 80 சதவிகிதம் தள்ளுபடி. நிச்சயம் இது மிகவும் மலிவானது என்றால் என்னால் நம்ப முடியவில்லை. நான் உண்மையில் 2023ல் தான் வாழ்கிறேனா? #Zomato 2023ல் வாழும் மக்களுக்கு இது பெரிய அளவிலான தள்ளுபடியாகத் தெரிகிறது" எனப் பகடி செய்துள்ளார்.
முன்னதாக, ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி கடந்த 22ம் தேதி அன்று 380 ஊழியர்களை "மறுசீரமைப்புப் பயிற்சியின்" ஒரு பகுதியாக சவாலான மேக்ரோ பொருளாதார நிலைமைகளை மேற்கோள் காட்டி பணிநீக்கம் செய்துள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜெட்டி, அதிக பேரை பணியமர்த்தியது தவறான முடிவானது என்று கூறியுள்ளார். ஸ்விக்கி பணி நீக்கம் உள் மின்னஞ்சலில், இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மெஜெட்டியும் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் மன்னிப்புக் கேட்டு, "கிடைக்கும் அனைத்து விருப்பங்களையும் ஆராய்ந்த பிறகு" எடுக்கப்பட்ட "மிகவும் கடினமான முடிவு" என்றும் இதனால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஒரு பணியாளர் உதவித் திட்டத்தை வழங்குவதாகவும் கூறினார். நிறுவனத்தின் கணிப்புகளுக்கு எதிராக உணவு விநியோகத்திற்கான வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்றார்.