இரண்டு நாட்களில் அரங்கேறியுள்ள இரண்டு தற்கொலை சம்பவங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தையே (ஐஐடி) உலுக்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிற் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் தற்கொலை சம்பவங்கள் தொடர்வது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.
ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள ஐஐடிகளில் இரண்டு நாட்களில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஐஐடி ஹைதராபாத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற 23 வயது இளைஞர் ஒருவர் கல்லூரி வளாகம் அருகே உள்ள லாட்ஜில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
பிடெக் பட்டதாரியான மேக் கபூர் புதன்கிழமை அதிகாலை கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த அவர், மூன்று மாதங்களுக்கு முன்பு ஐஐடியில் தேர்ச்சி பெற்ற பிறகு லாட்ஜில் தங்கி உள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி, இரண்டாம் ஆண்டு எம்டெக் மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்தார். 25 வயதான ராகுல் பிங்குமல்லா தனது விடுதி அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சூழலில், கான்பூர் ஐஐடியில் நேற்று மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பிரசாந்த் சிங் என்ற மாணவர் தனது விடுதி அறைக் கதவைத் தாழிட்டிருக்கிறார். நேற்று மாலை, பிரசாந்த் கதவை திறக்காததால், ஒரு மாணவர் வளாகத்தின் பாதுகாப்பு அலுவலர்களை அழைத்துள்ளார். இன்ஸ்டிடியூட் அதிகாரிகள் அறையை உடைத்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவரான பிரசாந்த், சிறந்த கல்வித் தகுதிகளை பெற்றுள்ளதாக ஐஐடி தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிஎச்டி-யில் சேர்வதற்கு முன்பு, அவர் தனது முதுகலைப் பட்டத்திற்காக 2019 இல் ஐஐடி கான்பூரில் சேர்ந்துள்ளார். "இந்த நிறுவனம் ஒரு திறமையான மாணவர் மற்றும் ஆர்வமுள்ள விஞ்ஞானியை இழந்துவிட்டது" என ஐஐடி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஐஐஐடியில் (இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி) ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுமி தனது தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்ததாக கூறப்படுகிறது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050