குஜராத் மாநிலம், வதோதராவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 19 பேரை போலீஸார் காவலில் வைத்துள்ளனர்.


தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. வட இந்திய மாநிலமான குஜராத்தின் வதோதரா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் பனிகேட் பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 


அந்தப் பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில், பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் வாகனங்கள் சேமடைந்தன. வாகனங்கள் சூறையாடப்பட்டன.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மீதும் பெட்ரோல் குண்டை மோதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வீசி எறிந்தனர். எனினும், இதில் யாரும் காயம் அடையவில்லை. அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று பட்டாசு பறந்து வந்து விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது என்று காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






காவல் துறை துணை ஆணையர் யஷ்பால் ஜகாங்கியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பனிகேட் பகுதியில் உள்ள முஸ்லிம் மெடிக்கல் சென்டர் அருகே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. நிலைமை தற்போத கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். மோதல் சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம். கண்காணிப்பு கேமராக்களைப் பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார் யஷ்பால் ஜகாங்கியா.


"நிலைமை சீராக இருக்கிறது, சந்தை வழக்கம் போல் இயங்கியது. பட்டாசு வெடிப்பதில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது" என்று அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் தெரிவித்தார்.


முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சொந்த ஊரான ஜோத்பூரில் இந்த ஆண்டு மே மாதம் ஈத் பண்டிகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வன்முறை வெடித்தது. இதனால் நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் மொபைல் இணைய சேவைகளை நிறுத்தி ஊரடங்கு உத்தரவை விதிக்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் வட்டத்தில் மதக் கொடிகளை வைப்பதில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இது கல் வீச்சுக்கு வழிவகுத்தது. இதில் ஐந்து போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜோத்பூர் காவல்துறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன் மொபைல் இணையச் சேவைகளை நிறுத்தியது.


ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் ரம்ஜான் அன்று இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்து, நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.