இந்தியாவில் சுமார் 17 லட்சம் குழந்தைகள் மிக மோசமான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆர்.டி.ஐ ஒன்றுக்கான பதிலில் அமைச்சகம் இவ்வாறூ விளக்கம் அளித்துள்ளது. இதன்மூலம் பெருந்தொற்று காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஊட்டசத்து குறைபாடு அதிகரிக்கலாம் என்கிற அச்சத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆர்டிஐ தகவல்படி மொத்தம் 17,76,902 (17.76 லட்சம்/1.7 மில்லியன்) குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.15,46,420 (15.46 லட்சம்/1.5 மில்லியன்) குழந்தைகள் மிதமான அளவிலான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இது கடந்த அக்டோபர் 14 வரையிலான சூழல்.
மொத்தம் 33,23,322 (33.23 லட்சம்/3.3 மில்லியன்) பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது நாட்டின் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் நிலவரம். ஊட்டச்சத்து குறைப்பாட்டில் மகாராஷ்டிரா குஜராஜ் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. அரசு உருவாக்கிய போஷான் ட்ராக்கர் அப்ளிகேஷன் வழியாக இந்த புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும் கடந்த ஆண்டுடனான புள்ளிவிவரத்துடன் ஒப்பிடுகையில் அது கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.நவம்பர் 2020 முதல் அக்டோபர் 2021 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 91 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 9.27 லட்சத்திலிருந்து 17 லட்சமாக அதிகரித்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு புள்ளிவிவரம் இந்த ஆண்டுக்கான புள்ளிவிவரத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் மொத்தம் 36 மாநிலங்களில் நேரடியாக அந்தந்த மாநில அரசால் எடுக்கப்பட்ட எண்ணிக்கையாக இருந்தது. இந்த ஆண்டோ அங்கன்வாடி ஊழியர்களே நேரடியாக போஷான் அப்ளிகேஷன் வழியாக இந்த எண்ணிக்கையை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை ஆந்திராவில் 2,67,228 (2.76 லட்சம்) கர்நாடகாவில் 2,49,463 (2.49 லட்சம்) பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தைப் பொருத்தவரை 1,86,640 (1.86 lakh) பிள்ளைகளும் தமிழ்நாட்டில் 1,78,060 (1.78 லட்சம்) பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிக முக்கியமாக உலக அளவில் அதிக மக்கள் பசியால் வாடும் நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 116 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா 101வது இடத்துக்குப் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் நேபால் ஆகிய நாடுகளுக்குப் பின் இந்தியா இந்தப் பட்டியலில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பேரிடர் தொடர்ந்து நீடிக்கும் சூழலில் இனி வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் மோசமடையும் எனவும் கூறப்படுகிறது.