Heat Wave: பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் மதிவான அதிகப்படியான வெப்பநிலை காரணமாக, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


வெப்ப அலை - 16 பேர் பலி:


பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் தான்,  2 மணி நேரத்தில் வெப்ப அலை பாதிப்பு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வியாழன் அன்று நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 44 டிகிரி செல்சியஸாகவும், புதன்கிழமை அன்று 48.2 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது பீகார் மாநிலத்தில் முன் எப்போதும் பதிவாகாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


35 பேருக்கு சிகிச்சை:


மருத்துவமனையில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கதறி அழுவது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. வெப்ப அலை தொடர்பான பாதிப்புகளால் குறைந்தது 35 பேர் தற்போது அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார். இதுதொடர்பாக பேசிய அவுரங்காபாத் மாவட்ட மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசுகையில், “எங்களிடம் போதுமான மருத்துவர்கள், மருந்துகள் மற்றும் ஐஸ் பேக்குகள் உள்ளன. மேலும் குளிரூட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்று கூறினார். 


also read: விஷால் என்னை மதிக்கவே இல்லை: செல்லமே பட இயக்குநர் காந்தி கிருஷ்ணா வேதனை


பள்ளிகள் விடுமுறை:


பீகாரில் தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தனியார் மற்றும் அரசு நடத்தும் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களை ஜூன் 8 ஆம் தேதி வரை மூடுமாறு மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. வெப்பத்தின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கமடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் குறைந்தது 16 சிறுமிகள் மயங்கி விழுந்தனர், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியாததால், அவர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இ-ரிக்ஷாக்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெகுசராய் மற்றும் ஜமுய் ஆகிய இடங்களில் இருந்தும் மாணவர்கள் மயக்கம் அடைந்ததாக செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பாக ஆர்ஜேடி தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் பீகார் அரசையும், முதல்வர் நிதிஷ் குமாரையும் கடுமையாக சாடினார். 


தேஜஸ்வி யாதவ் கண்டனம்:


இதுதொடர்பான அறிக்கையில், "பீகாரில் ஜனநாயகமோ ஆட்சியோ இல்லை. அதிகாரத்துவம் மட்டுமே உள்ளது. முதல்வர் ஏன் இவ்வளவு பலவீனமாக இருக்கிறார்? வெப்பநிலை 47 டிகிரியாக உள்ளது. இதுபோன்ற வானிலையில் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இங்கே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன," என்று அவர் கூறியிருந்தார். இதனிடையே, மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.