காந்தி கிருஷ்ணா


இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து  விஷாலை வைத்து செல்லமே படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் காந்தி கிருஷ்ணா. செல்லமே படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆனந்த தாண்டவம் படத்தை இயக்கினார். இந்த படம் தோல்வியை சந்திக்கவே அடுத்து இவர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தொடர்ச்சியாக படங்களை இயக்காமல் போனதற்கான பல்வேறு காரணங்களை வெளிப்படையாக பேசி தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் காந்தி கிருஷ்ணா.


ஷங்கருக்கு சுஜாதாவை அறிமுகப்படுத்தியது நான் தான்


 ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் , காதலன் உள்ளிட்ட படங்களில்  உதவி இயக்குநராக  பணியாற்றியுள்ளார் காந்தி கிருஷ்ணா. இந்தப் படங்களுக்கு எழுத்தாளர் பாலகுமாரன் கதாசிரியராக இருந்த நிலையில் இந்தியன் படத்திற்கு சுஜாதாவை கதாசிரியராக அறிமுகத்தியது தான் என்று காந்தி கிருஷ்ணா இந்த நேர்காணலில்  தெரிவித்துள்ளார். இந்தியன் படத்தில் ரஜினியை நடிக்க வைப்பது தான் ஷங்கரின் எண்ணமாக இருந்ததாகவும் ஆனால் தனது மைண்டில் கமல் தான் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் காந்தி கிருஷ்ணா.


விஷால் என்னை மதிக்கவில்லை


செல்லமே படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷாலை வைத்து அடுத்தப் படத்தை இயக்கவிருந்ததாகவும், ஆனால் விஷால் தன்னை சரியாக மதிக்கவில்லை என்று காந்தி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். விஷாலை சந்திக்க சென்றபோது அவர் தன்னை காரவானில் இருந்து வெளியே சென்று காத்திருக்கச் சொன்னதாகவும் வெறும் வார்த்தையில் சீக்கிரம் படம் பண்ணலாம் என்று சொன்னதாகவும் அந்த நாள் முதல் இன்றுவரை வரவில்லை என்று அவர் தெர்வித்துள்ளார். விஷால் அரசியலுக்கு வந்து முதலமைச்சராகவே ஆனாலும் கூட அதில் தனக்கு எந்த கவலையும் இல்லை என்று விஷாலுடனான தனது உறவு முடிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.


வதந்திகளை கிளப்பி எனக்கு சமாதி கட்டிவிட்டார்கள்


 ”விக்ரமை வைத்து கரிகாலன் என்கிற படத்தை இயக்க நினைத்தேன். ஆனால் அந்த படத்திற்கு நான் கேட்ட பட்ஜெட்டை தயாரிப்பாளர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்கள் . இதனால் அந்த படத்தில் இருந்து விலகினேன். பெரிய இயக்குநர் ஆவேன் என்கிற கனவில் இருந்தேன். ஆனால் படப்பிடிப்பில் பிஸ்லரி வாட்டரில் குளித்ததாக என்னைப் பற்றி இல்லாத கதை எல்லாம் கட்டிவீட்டார்கள். பின் அடுத்து கதை சொல்ல சென்ற கம்பெனிகளில் நிறைய சிக்கல்களை கொடுத்து எனக்கு சமாதி கட்டிவிட்டார்கள். இப்போது இணை இயக்குநராக பணியாற்றுவதில் எனக்கு எந்த ஈகோவோ வருத்தமோ இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்