Prajwal Revanna: பாலியல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தஞ்சமடைந்து இருந்த, கர்நாடகாவைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணாவை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளது.
காத்திருந்து கைது செய்த சிறப்பு விசாரணைக் குழு:
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணா, அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், வரும் மே 31 ஆம் தேதி தாயகம் திரும்பி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முன் ஆஜராவேன் என்று அறிவித்தார். வாக்குறுதி அளித்தபடி அவர் திரும்பத் தவறினால் பாஸ்போர்ட் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்தது. இந்நிலையில் நள்ளிரவில் நாடு திரும்பிய ரேவண்னாவை, விமான நிலையத்திலேயே காத்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்காக அவர் சிறப்பு விசாரணைக் குழுவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாலியல் சர்ச்சை:
33 வயதான பிரஜ்வல் ரேவண்ணா, ஜேடி(எஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவே கவுடாவின் பேரன் ஆவார். ஏராளமான பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக, பல வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்கள் கடந்த ஏப்ரல் மாதம் பொதுஇடங்களில் சிதறிக்கிடந்தன. இது மக்களவை தேர்தலில் பெரும் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. இதனால், அவசர அவசரமாக ரேவண்ணா கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளிநாடு தப்பிச் சென்றார். 28ம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தேவகவுடாவே எச்சரித்து இருந்தார். ரேவண்ணாஎங்கிருக்கிறார் என்பது குறித்து இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸையும் வெளியிட்டது. இந்நிலையில் தான், ரேவண்னா விசாரணைக் குழு முன்பு ஆஜராகியுள்ளார்.
ஜாமின் மறுப்பு:
ரேவண்ணாவின் இராஜதந்திர பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியா திரும்புவதற்கு முன்னதாகவே, ரேவண்ணா சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பெங்களூரு கீழமை நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் கண்டனம்:
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவரும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, “பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தபோது, வீடியோக்கள் வைரலானபோது அவர் அமைதியாக இருந்தார். ஆனால் பென் டிரைவ்கள் விநியோகிக்கப்படும்போது, திடீரென சுயநினைவுக்கு வந்திருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. நான் மனச்சோர்வடைந்தேன், தனிமைப்படுத்தப்பட்டேன் என்று ரேவண்ணா கூறுகிறார். ஆனால் அவர் பேசிய வீடியோவை பார்த்தால் மனச்சோர்வில் இருப்பதை போன்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத அவர், 30 நாட்களுக்குப் பிறகு இந்த விளக்கத்தை அளித்துள்ளார். இதனை ஆரம்பத்திலேயே கொடுத்து இருக்கலாமே? இந்த விவகாரத்தை உற்று கவனித்தாலே, இதை அனைத்தையும் பாஜகவே வழிநடத்துகிறது என்பது புரியும்” என சாடியுள்ளார்.