இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 1500 பக்க குற்றப்பத்திரிகையில், ஆறு பெண்களின் புகார்களில் குறைந்தது நான்கிற்கு (மல்யுத்த வீரர்கள்) புகைப்பட ஆதாரம் மற்றும் வீடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளன. 


குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்ட வாக்குமூலங்கள்


விசாரணையின் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களில், பாதிக்கப்பட்டவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான நபர்களின் வாக்குமூலங்கள் மட்டுமே குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் முன்பு தெரிவித்தது. 100 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மட்டுமே வழக்குடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டது, ஆனால் அவற்றில், பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளுடன் உறுதிப்படுத்தப்பட்ட சில சாட்சிகளின் அறிக்கைகள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தில்லி போலீஸார் வியாழக்கிழமை இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதுகுறித்து நீதிமன்றம் ஜூன் 22 அன்று விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.



விடியோ புகைப்பட சாட்சியங்கள்


குற்றப்பத்திரிகையில் ஆறு மல்யுத்த வீரர்களின் கூட்டு சாட்சியங்கள், 70-80 சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அழைப்பு விவர பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்நுட்ப ஆதாரங்கள் அடங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆறு மல்யுத்த வீரர்கள் தங்கள் புகார்களில் பல சம்பவங்களை கூறியதால் ஒவ்வொரு புகாரையும் தனித்தனியாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒவ்வொரு புகாருக்கும் போலீசார், சாட்சிகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மேற்கோள் காட்டியுள்ளனர். ஆறு புகார்களில், நான்கில் புகைப்பட ஆதாரங்களை இணைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: குஷியான செய்தி மக்களே.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..


எல்லா திசையில் இருந்தும் ஆதாரங்கள் சேர்ப்பு


சான்றுகளில் பதக்க விழாக்கள், குழு புகைப்படங்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கும். புகார்களில் கூறப்படும் பல சம்பவங்கள் WFI அலுவலகம், போட்டிகள், முகாம்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து வந்தவை என்று காவல்துறை அதிகாரி மேலும் கூறினார். "வழக்கில் உள்ள ஆறு பெண் புகார்தாரர்களும் தங்கள் வாக்குமூலங்களை விரிவாகப் பதிவுசெய்துள்ளனர், மேலும் அழைப்பு விவரங்கள் பதிவு (கடந்த ஆண்டிலிருந்து கிடைக்கிறது), புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக இருக்கும் ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம்" என்று ஒரு போலீஸ் வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்துள்ளது. 



துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்


நேரில் கண்ட சாட்சிகள், இணை பங்கேற்பாளர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் பணியாளர்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகும் என PTI தெரிவித்துள்ளது, மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் கிடைக்கும்போது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மே 28 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த கலவரம் தொடர்பாக மல்யுத்த வீரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி டெல்லி காவல்துறை நீதிமன்றத்தை அணுகவுள்ளது. ஜூன் 7ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடனான சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த உறுதிமொழிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் சேர்க்கப்படவுள்ள விஷயங்கள்


விசாரணையின் ஒரு பகுதியாக, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக விவரங்களைக் கோரி ஐந்து நாடுகளின் மல்யுத்தக் கூட்டமைப்புகளுக்கும் டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. தற்போது அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது. இவை கிடைத்ததும், குற்றப்பத்திரிகையில் விவரங்களும் சேர்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மற்றும் மல்யுத்த வீரர்கள் தங்கள் போட்டிகளின் போது தங்கியிருந்த இடங்களின் சிசிடிவி காட்சிகளைக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.