Delhi Railway Station Stampede Reasons: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, காரணங்கள் என்ன என்பதை இங்கே அறியலாம்.


18 உயிர்களை பலி வாங்கிய கூட்ட நெரிசல்:


உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவசை அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை தந்தது. அதைதொடர்ந்து, விடுமுறை நாளான நேற்று டெல்லியில் இருந்து ஏராளமானோர் உத்தரபிரதேசம் நோக்கி பயணம் மேற்கொள்ள முற்பட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 4 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்த புகைப்படங்கள் காண்போரை கண்கலங்க செய்துள்ளது. 



ரயில்வேயின் தாமதமான முடிவு:


பெரும் கோர சம்பவத்திற்கு பிறகு, டெல்லி ரயில் நிலையத்தில் உள்ள கூட்டத்தை குறைக்கும் வகையில் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆனால், வார இறுதி நாட்கள் மற்றும் கும்பமேளாவிற்கு செல்லும் கூட்டம் அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க, ரயில்வே நிர்வாகம் தவறியதே இந்த கோர சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே, பிரயாக்ராஜிற்கு செல்ல போதுமான ரயில்கள் இல்லாததால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதையும், ரயில்களின் கண்ணாடிகளை உடைத்து முண்டியடித்துக்கொண்டு மக்கள் உள்ளே புகுந்ததையும் பல வீடியோக்கள் காட்டின. அப்படி இருக்கையில், வார இறுதியில் கூட்ட நெரிசலை கணிக்க ரயில்வே நிர்வாகம் தவறியதும் விபத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.


வழக்கம்போல் தாமதமாக வந்த ரயில்கள்:


பீகார் மற்றும் டெல்லி இடையேயான சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் ஒடிஷா மற்றும் டெல்லி இடையேயான புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களுமே நேற்று தாமதமாக வந்துள்ளன. அதற்காக காத்திருந்த பயணிகளாலும், ரயில் நிலையத்தில் கூட்டம் நிறைந்து வழிந்துள்ளது. குறிப்பிட்ட ரயில்களின் பயணிகளும் 12, 13 மற்றும் 14 பிளாட்பாரங்களில் காத்திருந்துள்ளனர். அதேநேரம், பிரயாக்ராஜ் பயணிக்கும் நோக்கிலும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் குவிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மணிக்கு ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதனால், அங்கு அதிகப்படியான மற்றும் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் கூடி, பிளாட்ஃபார்ம் 14 மற்றும் பிளாட்ஃபார்ம் 16 அருகே இருந்த எஸ்கலேட்டர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


”காவலர்களே இல்லை” - பயணிகள் குற்றச்சாட்டு:


விபத்தில் தனது தாயை இழந்த ஒருவர் பேசுகையில், “இது ஏன் நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. திடீரென்று ஏராளமானோர் குவிந்து ஒருவரையொருவர் தள்ளிக்கொள்ளத் தொடங்கினர். ஆனால், அங்கு போலீசார் யாரும் இல்லை” என தெரிவித்தார். மற்றொருவர் பேசுகையில், “பண்டிகைகளின் போது கூட ரயில் நிலையத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததில்லை. நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கூட அங்கு இருந்தனர், ஆனால் கூட்டம் வரம்பை மீறியபோது, ​​அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்று குறிப்பிட்டார்.


என்று சீராகும் ரயில்வே..!


ரயில் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவது என்பது முடிந்தபாடாக இல்லை. கடந்த அக்டோபர் மாதம் வெளியான தரவுகளின்படி, கடைசி 5 ஆண்டுகளில் , 200 ரயில் விபத்துகளில் 351 பேர் இறந்துள்ளனர் மற்றும் 970 பேர் காயமடைந்துள்ளனர் என்று 17 ரயில்வே மண்டலங்களிலிருந்து இந்திய ரயில்வே பகிர்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ரயில்கள் தாமதமாக வருகின்றன என்ற பிரச்னைக்கும் தீர்வு கண்டதாக தெரியவில்லை. ஒருவேளை நேற்று குறிப்பிட்ட இரண்டு ரயில்களும், சரியான நேரத்திற்கு வந்திருந்தால் 18 பேரின் உயிர்கள் பறிபோகாமல் இருந்து இருக்கலாம். அல்லது அந்த சிரப்பு ரயில்களை முன்கூட்டியே இருந்திருந்தலாம் அந்த 18 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ள்து.


இதனிடையே, கும்பமேளாவிற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மாநிலத்தில் வணிகம் நடைபெற்று இருப்பதாகவும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோஜ்கி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.