கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வர்கலா கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக மிதக்கும் பாலத்தின் கைப்பிடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்து இன்று அதாவது மார்ச் மாதம் 9ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் கடலில் விழுந்தனர். கடலில் விழுந்தவர்கள் அனைவரும் லைப் ஜாக்கெட் அணிந்திருந்தாலும், கடலில் வீசிய மோசமான அலைகள் காரணமாக கரைக்கு நீந்தி வரமுடியாமல் தத்தளித்தனர்.


கடலில் விழுந்தவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வர்கலா தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடலில் விழுந்த 15 பேரில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவலைக்கிடமாக உள்ள இருவரும் கடல் நீரை அதிகம் குடித்ததுதான் காரணமாக கூறப்படுகின்றது. 


இந்த பாலம், கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி திருவனந்தபுரம் மாவட்டத்தின் முதல் மிதக்கும் பாலத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் திறந்து வைத்தார். மாநிலத்தின் ஏழாவது மிதக்கும் பாலமாக வர்கலாவில் இது கட்டமைக்கப்பட்டது. இந்த  பாலம் கரையில் இருந்து கடலுக்குள் 100 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும் கொண்டது.






இந்த மிதக்கும்பாலத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் நடக்க முடியும். 700 கிலோ எடையுள்ள நங்கூரங்கள் மூலம் பாலம் கட்டமைக்கப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பாலத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில், கேரள சாகச் சுற்றுலா மேம்பாட்டு சங்கம் மற்றும் வரகலா நகராட்சி என இந்த மூன்றும் இணைந்து இந்த பாலம் கட்டப்பட்டது. .