டியோடரண்ட் பயன்படுத்தியதால் இங்கிலாந்தில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.
டியோடரன்ட்:
டியோடரன்ட்கள் எனப்படுபவை வியர்வை ஏற்படாமல் தடுக்கக் கூடிய மற்றும் உடலில் இருந்து துர்நாற்றம் ஏதும் எழாமல் இருக்க பெரும்பாலோனார்களால் தினசரி பயன்படுத்தப்படும் தனிப்பட்ட சுகாதார வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஆனால் டியோடரன்ட்கள் தயாரிக்கப்பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் உள்ள நச்சுத் தன்மையும், அது விளைவிக்கும் தீங்கும் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.
சில நேரங்களில், டியோடரண்டுகளில் உள்ள இரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும், தடிப்புகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் அது அத்துடன் முடியவில்லை. இன்று அது ஒரு உயிரையே பறித்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மையாக உள்ளது.
மாரடடைப்பால் உயிரிழந்த 14 வயது சிறுமி:
டியோடரண்ட் தெளித்து 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுமியின் உடலை பரிசோதித்த மருத்தவர்கள், சிறுமி மாரடைப்பால் இறந்துள்ளார். அதற்கு காரணம் அவர் ஏரோசெல் எனப்படும் வேதிப் பொருளை உள்ளிழுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமி ஜியோர்ஜியா கிரீன், தனது படுக்கை அறையில் டியோடரண்டை தெளித்துள்ளார். ஆனால் இந்த டியோடரண்டை வாய், மூக்கு உறுப்புகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் உயிரிழந்த அந்த சிறுமி தனது படுக்கை அறையில் டியோடரண்டை தெளித்துள்ளார். குறிப்பாக அவரது அறையில் உள்ள போர்வைகளிலும் தெளித்துள்ளார். ஏசி போடப்பட்டு மூடிவைக்கப்பட்ட அந்த அறையினுள் டியோடரண்ட்டில் உள்ள ஏரோசெல் எனப்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வேதிப் பொருளின் அளவு அதிகமாகியுள்ளது. அறைக்குள் இருந்த காற்றினை சுவாசித்த சிறுமி ஜியோர்ஜியா கிரீன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
டியோடரண்ட் ஆபத்துகள்:
டியோடரண்டுகளில் உள்ள ஏரோசால் நச்சு,மற்றும் அதோடு உள்ள மற்ற நச்சு இரசாயனங்கள் மற்றும் வாயுக்கள் ஆபத்தானவை. டெல்லியில் நடந்துள்ள இதுபோன்ற சம்பவங்கள் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தினை விளைவிப்பதோடு உயிரையும் பறிக்கலாம். இதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவது மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டைப் பற்றி எடுத்துக் கூறுவதும் மிகவும் முக்கியம். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும். மேலும் இது போன்ற நச்சுப் பொருட்கள் அதிகம் கலக்கப்பட்டுள்ள தயாரிப்புகளை குழந்தைகளுக்கு எட்டாத தூரத்தில் வைப்பது மட்டுமில்லாமல், அவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது அல்லது தவிர்க்க வேண்டியதும் மிக அவசியம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுமி ஜியோர்ஜியா கிரீனின் தந்தை கூறுகையில், டியோடரண்டுகளில் உள்ள எச்சரிக்கைகள் மிகவும் சிறிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் டியோடரண்டுகளில் உள்ள ஆபத்தான விஷயங்கள் குறித்து பெற்றோர்கள் எதுவும் தெரிந்து கொள்ளாமல் தங்களின் குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். நமது நாட்டில் மட்டும் இல்லை இந்த உலகத்தில் கூட யாருக்கும் இது போன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் உயிரிழப்பு:
இங்கிலாந்தில் 2001 மற்றும் 2020 க்கு இடையில் மட்டும் 11 பேரின் இறப்பு சான்றிதழ்களில் இறப்புக்கு காரணம் "டியோடரண்ட்" குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோர்ஜியாவின் இறப்புச் சான்றிதழில் "டியோடரன்ட்" என்பதற்குப் பதிலாக "ஏரோசால் சுவாசித்ததால்" உயிரிழப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டியோடரண்டின் முக்கிய மூலப்பொருளான பியூட்டேனால் 2001 முதல் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் 324 இறப்புகள் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டியோடரண்டின் மற்றொரு மூலப் பொருளான புரோபேனால் 123 இறப்புகளும் மற்றும் ஐசோபுடேனால் 38 இறப்புகளும் எற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விபரங்களை வைத்துப் பார்க்கும்போது, மிகவும் சாதாரணமாக இன்றைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒரு பொருளால் ஆண்டுக்கு 15 முதல் 20 பேர் இறக்கிறார்கள் எனும் அதிர்ச்சி அளிக்கும் உண்மை புலப்படும்.