பீகார் மாநிலம் பாட்னாவில் சரஸ்வதி தேவியின் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். பாட்னாவில் உள்ள போலீஸ் தலைமையகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர் உயிரிழப்பு:
உயிரிழந்த இளைஞர் பெயர் தீரஜ் என்று தெரியவந்துள்ளது. சைத்பூர் விடுதியின் மாணவர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று சிலை கரைப்பிற்காக கங்கை ஆற்றுக்குச் சென்றபோது கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டில் இறந்தார். தீரஜ் ஜெகனாபாத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இறந்தவர் சுடப்படுவதற்கு முன்னர் ஊர்வலத்தில் இருந்தவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியில் இருந்து ஆறு ரவுண்டுகள் சுட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த தீரஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி கலாச்சாரம்:
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காலிபோர்னியாவில் தொடர்ந்து மூன்று நாட்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடந்தது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பலர் கண்டனங்களை தெரிவித்தாலும் துப்பாக்கிச்சூடு நின்ற பாடில்லை.
சமீபத்தில்தான், கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அதில், ஆறு மாத குழந்தை, 17 வயது தாய் உள்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது.
விசாலியா நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோஷன் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து அதிகாலை துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது.
இதேபோல, வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
துப்பாக்கி தடைச்சட்டம்:
அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.
அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உவால்டே படுகொலைக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மீண்டும் துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவற்றை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தகைய தடை, அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என்று கருதுகின்றனர். அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.