மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பையில் திறந்த வெளியில் பூஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமித் ஷா தலைமையிலான இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அடுத்தடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் சுருண்டு விழுந்து மயங்கினர். அவர்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 24 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.


அவர்களை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து மரணித்தவர்களின் குடும்பத்திற்கு மகாராஷ்டிரா அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்ற 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


அரசு விருது வழங்கும் நிகழ்ச்சி:


மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநில அரசு விருது  வழங்கும் விழா நடந்தது. நவிமும்பை கார்கரில் உள்ள பிரமாண்ட திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


சுட்டெரித்த வெயில்:


 மைதானம் கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடை நிகழச்சிகளைக் காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் செய்யப்பட்டிருந்த அதேநேரத்தில் பந்தல் எதுவும் போடப்படவில்லை. காலை 11.30 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழா மதியம் 1 மணி வரை நடந்தது. அந்த நண்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது. சுட்டெரித்த இந்த கோடை வெயிலை தாங்க முடியாமல் கூட்டத்தில் இருந்த பலரும், அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். 


எதிர்கட்சிகள் சாடல்:


இந்நிலையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே அவரது மகன் ஆதித்யா தாக்ரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்ரே ”நான் 4 முதல் 5 பேரிடம் கலந்துரையாடினேன். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அரசு நிகழ்ச்சி முறையாக திட்டமிட்டு நடத்தப்படவில்லை. இதனை யார் விசாரிக்கப்போகிறார்கள்” என கேள்வி எழுப்பினார்.