மகாராஷ்டிராவில் தோல் கழலை நோயால் 126 கால்நடைகள் இறந்துள்ளன. இந்த நோயால் 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஜல்கான் மாவட்டத்தில் 47, அகமத்நகர் மாவட்டத்தில் 21, துலேயில் 2, அகோலாவில் 18, புனேவில் 14, லத்தூரில் 2, சதாராவில் 6, புல்தானாவில் 5, அமராவதியில் 7, சாங்லியில் ஒன்று, வாஷிமில் ஒன்று, ஜல்னாவில் ஒன்று மற்றும் நாக்பூர் மாவட்டத்தில் ஒன்று
என தோல் கழலை நோயால் பாதிக்கப்பட்ட 126 விலங்குகள் உயிரிழந்துள்ளன.


தோல் கழலை நோய் (எல்.எஸ்.டி) வேகமாகப் பரவுகிறது என்றாலும், விலங்குகள் மூலமாகவோ அல்லது பசுவின் பால் மூலமாகவோ மனிதர்களுக்கு இது பரவுவதில்லை. இது மாடுகளுக்கு ஏற்படும் தோல் தொடர்பான வைரஸ் நோய்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையில், அரசின் சார்பில் ஐஏஎஸ் அலுவலர் சசீந்திர பிரதாப் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளதாவது, "நோய் பரவினாலும், பசு மற்றும் காளை மாடுகளுக்கு மட்டுமே பரவுகிறது. அனைத்து விலங்குகளுக்கும் பரவவில்லை. சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"


நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, "நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு ஒரு மாவட்டத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி நேரடி கொள்முதல் மையங்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. 


மஹாராஷ்டிரா விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் (MAFSU) தடுப்பூசி போடுபவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒரு தடுப்பூசிக்கு 3 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். மஹாராஷ்டிரா விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சை நெறிமுறையை போல சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 


 






விவசாயிகள், தங்களின் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறிகளை கண்டறிந்தால், அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகங்கள்/கால்நடை மேம்பாட்டு அலுவலர்களுக்கு தெரிவித்து தங்கள் வீட்டிலேயே இலவச சிகிச்சையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.