ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பாகல்பூரில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும் அங்கா விரைவு ரயில் நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கல்ஜாரியா, பகுதி அருகே வந்த போது ரயிலில் தீ பிடித்ததாக பயணிகளிடையே வதந்தி பரவியது.
இதனால் பதற்றமடைந்த பயணிகள் ஓடும் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின் அந்த ரயிலில் இருந்து பயணிகள் அவசரமாக இறங்கியுள்ளனர். தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் அருகே இருக்கும் தண்டவாளத்தின் குறுக்கே ஓட முயற்சித்துள்ளனர். அப்போது அந்த வழியாக சுமார் 140 கி.மீ வேகத்தில் வந்த மற்றொரு விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 12 பேர் சமப்வ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என என ஜம்தாரா துணைப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த ரயிலில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த ரயில்வே துறை இந்த கோர விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்டில் நடைபெற்ற விபத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நடைபெற்ற கோர விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், “ஜம்தாராவின் கல்ஜாரியா ஸ்டேஷன் அருகே ரயில் விபத்துக்குள்ளான செய்தியால் மனம் வருந்துகிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இக்கட்டான காலக்கட்டத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு வழங்கவும் வேண்டுகிறேன். நிர்வாக குழுவினர் சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.