’சிவிங்கிப் புலி’ திட்டத்தின் கீழ் தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் நாளை மறுநாள் (18,பிப்ரவரி,2023) இந்தியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனம் அழிந்து 74 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் நோக்கில், நமீபியாவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு முதல் கட்டமாக, 8 சிவிங்குப் புலிகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு கொண்டுவரப்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பர்,17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளன்று ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் விடுவித்தார்.
இந்நிலையில், இத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வர இருக்கின்றனர் என்பதை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே, இந்தியாவில் வசித்து வரும் எட்டு சிவிங்கிப் புலிகள் ஆரோக்கியமுடன் இருப்பதாகவும், மூன்று -நான்கு நாள்களுக்கு ஒருமுறை உணவுக்காக வேட்டையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் திட்டம்:
நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிவிங்கிப் புலிகள் (cheetahs) ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. ஒரு காலத்தில் இதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகையால் வேட்டையாடப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கிப் புலி இனத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. பின்பு, இந்தியாவில் சிவிங்கிப் புலி இல்லாமலே போனது. தற்போது ப்ராஜெட்க் டைகர் (’Project Tiger') மூலம் இந்தியாவில் சிவிங்கிப் புலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவிங்கிப் புலிகள் காணப்பட்டன. பின்னர், 1952-இல் சிவிங்கிப் புலி இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிவிங்கிப் புலி வாழும் இடமாக இந்தியா இருக்க வேண்டுமென்றும், நாட்டில் சிவிங்கிப் புலியை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில், தென் ஆப்பிரிக்காவில் வாழும் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதோடு மட்டுமல்லாமல், ‘ சிவிங்கிப் புலி திட்டத்தை செயல்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (National Tiger Conservation Authority (NTCA)) வழிகாட்டும் நோக்கில் 3 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
கண்டங்களுக்கு இடையேயான இடமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்தாண்டு செப்டம்பர் 17 அன்று ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டு, அதே நாளில் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்குள் (KPNP) விடப்பட்டது. அப்போது, கொரோனா காலம் என்பதால், சிவிங்கிப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட பிறகே வனத்திற்குள் விடப்பட்டது. இதைப்போலவே, இம்முறையும் பயண திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.