தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மும்பை நகரில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பை மாநகரின் பல சாலைகளில் வெள்ள நீர் பெருக்கு எடுத்து ஓடி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நேற்று பெய்த கனமழை காரணமாக இரவு மேற்கு மாலாடு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 3க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் சரியாக நேற்று இரவு 10.15 மணிக்கு நடைபெற்றதுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளனர். நேற்று இரவு முதல் தொடங்கிய மீட்பு காலை வரை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்,"சரியாக இரவு 10.15 மணி இருக்கும் எனக்கு ஒரு நபர் அருகே இருக்கும் கட்டிங்கள் இடிந்து விழுகிறது என்ற தகவலை தெரிவித்தார். அப்போது நான் உடனடியாக என்னுடைய வீட்டிலிருந்து வெளியே வந்தேன். அந்த சமயத்தில் ஒரு கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் 3 கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதை காணும் போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் " எனக் கூறினார்.
மற்றொருவர், "ஒரு 4 மாடி குடியிருப்பு அப்படியே இடிந்து தரைமட்டமானது. அதிலிருந்து தற்போது வரை 7 நபர்கள் மற்றும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். நாங்கள் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்த உடனே அவர்கள் தீயணைப்பு துறையுடன் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்"எனக் கூறினார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை மகாராஷ்டிர அமைச்சர் அஸ்லாம் ஷேக் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"மழை காரணமாக இங்கு கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது"எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க:‛தயக்கமல்ல தட்டுப்பாடே காரணம்’ தடுப்பூசி குறித்து பிரதீப் கவுர் கருத்து!