குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது ராஜ்கோட். நாட்டின் முக்கியமான நகரங்களில் ராஜ்கோட்டும் ஒன்றாக உள்ளது. இங்கு பொழுதுபோக்கு பகுதியாக குழந்தைகள், இளைஞர்களை கவரும் வகையில் விளையாட்டுத் தளம்( கேமிங் ஜோன்) ஒன்று உள்ளது.
33 பேர் உயிரிழப்பு:
இந்த நிலையில், திடீரென நேற்று மாலை இங்கு தீப்பிடித்தது. திடீரென பிடித்த தீ மளமளவென பரவியது. இந்த தீ பரவியதால் மக்கள் அலறியடித்து அங்கும், இங்கும் ஓடினர். இந்த சம்பவத்தில் சிக்கி 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விளையாட்டு தளத்தில் வெல்டிங் வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது தீ பரவியதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து நடைபெற்ற இடத்திற்கு தகவலறிந்த உடனே, தீயணைப்புத்துறையினர் சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீப்பிடிப்பு சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
பெரும் சோகம்:
சம்பவம் தொடர்பாக ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜூ பார்கவ் நேற்று கூறியதாவது, "இன்று மதியம் அந்த விளையாட்டு தளத்தில் இருந்து திடீரென தீயுடன் கூடிய புகை வந்தது. தற்போது மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது தீ கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார். இதுவரை 20 சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, குடும்பத்துடன் மக்கள் பொழுதுபோக்கிற்காக சென்ற இடத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்தது குஜராத் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றம் பரபர கருத்து:
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, விபத்து நடைபெற்ற இடத்திற்கு சொந்தமான யுவராஜ் சோலங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குஜராத் உயர் நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.
ராஜ்கோட் விபத்தை மனிதரால் நிகழ்ந்த பேரழிவு என குறிப்பிட்ட நீதிமன்றம், "மனிதரால் உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவு நிகழ்ந்துள்ளது. அங்கு குழந்தைகளின் அப்பாவி உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அந்தந்த குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன.
குஜராத் பொது வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் (GDCR) உள்ள ஓட்டைகளை ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு தளம் சாதகமாகப் பயன்படுத்தியதாக செய்தித்தாள் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன" என தெரிவித்தது.