மணிப்பூர் இனக்கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. 


கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் மலைப்பிரதேச மாவட்டங்களில் வசிக்கும் குக்கி, நாகா ஆகிய பழங்குடியின மக்களுக்கும், அதன் தலைநகர் இம்பாலை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்கும் இடையே  மே 3 ஆம் தேதி வன்முறை வெடித்தது. அதாவது மைதேயி இனத்தவருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என மலை வாழ் பழங்குடியினத்தவர் நடத்திய பேரணியில் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது. 


ஒன்றரை மாதங்கள் மேலாகியும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. இதுவரை 120க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தினமும் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகளும் குறிவைத்து தாக்கப்படுகிறன்றன. 


சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ராணுவத்தினர் இரவு பகலாக பாதுகாப்பு பணியிலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை இழந்த மக்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என மாநில முதல்வர் பிரேன் சிங் கூறியுள்ளார். 


இதனிடையே மணிப்பூரில் தொடரும் இனக்கலவரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் பிளவு மற்றும் ஆட்சி அரசியலால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


மேலும், கலவரம் தொடர்பான தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மோதல்களைத் தவிர்த்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடிதத்தில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதியை விமர்சித்ததோடு, மத்திய அமைச்சர் அமித்ஷா அங்கு சென்று வந்தாலும் ‘அமைதி திரும்புவது கடினம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏபிபி நாடு செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்