இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், 1,61,736 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 879 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 51,751 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 10,000க்கும் அதிகமான பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் அளவு, மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 3.62 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று 1,22,53,697-ஆக உள்ளது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 10988999 கடந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 90 சதவீதத்தை (89.51) நெருங்குகிறது.
இதுவரை, 1,71,058 பேர் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி நாட்டின் இறப்பு விகிதம் 1.25 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரியை விட குறைந்தது 14 மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதில் பஞ்சாப், சிக்கிம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் இறப்பு அனைவருக்கும் கவலை அளிப்பதாக உள்ளது. பஞ்சாபின் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 3,000 ஆக குறைந்து வருகிறது.
அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், நாகலாந்து, மேகலாயா, மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் – 19 தொற்றுள்ள நோயாளிகளில் குணமடைவோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.