கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தாலும் அறிவித்தார், அரசியல் கட்சிகள் தங்களின் பிரசார பயணத்தை மறுநாளே துவக்கிவிட்டனர். காரணம், மிக குறுகிய காலத்தில் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதி தான்.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு என்றதும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வான்வழி சேவையை தான் அனைத்து தலைவர்களும் தேர்வு செய்தனர். தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் என சென்னை விமான நிலையம் முன்பை விட தற்போது பிஸியாக உள்ளது. வருகை, புறப்பாடு என இரு பகுதிகளும் முன்பில்லாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள், சிறிய கட்சியின் தலைவர்கள் என அனைவரின் வருகையால் சென்னை விமான நிலையம் கடந்த இரு வாரங்களாக பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த 15 நாளில் மட்டும் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தி 161 தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தலைவர்கள் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
குறைந்த பட்சம் 2 மணி நேரம் என்கிற அடிப்படையில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு விடப்படுகிறது. அதற்காக 1.5 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை இடத்திற்கு ஏற்றார் போல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை 228 பேர் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்துள்ளனர்.
இதற்கு முன்பு பெரும்பாலும் மருத்துவ சேவைக்கு தான் தனி சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தேர்தல் அனல் ‛பறப்பதால்’ அரசியல் காரணங்களுக்காக தனி சேவையை அனைத்து கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 14 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் தனி விமான சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.