மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் ராமசுப்பிரமணியன். அவர் தேர்தல் ஆணையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக இருப்பதாக கூறி தனது புகாரின் தெரிவித்துள்ளார். அப்படி என்ன புகார் தெரிவிக்கப்பட்டது? அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது? என்பது குறித்து ராமசுப்பிரமணியனின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் இதோ:




2013ம் ஆண்டு சுப்பிரமணியபாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கில் , ‛அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மூலமாக நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத அறிவிப்பின் மூலம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மக்களை மறைமுகமாக தூண்டாதபடி தேர்தல் அறிக்கையை வெளியிட வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 2015 ஏப்ரல் 24ல் தேர்தல் ஆணையம் விதிமுறைகளை உருவாக்கியது அதன் படி தேர்தல் அறிக்கையில் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஆதாரங்களை குறிப்பிட வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையாகவும், வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய சாத்தியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டது.



ஆனால் அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் 2 கோடி பேருக்கு அரசு வேலை என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும், ஏற்கனவே அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58யில் இருந்து 60 ஆக உயர்த்தியதால் இளைஞர்களுக்கான அரசு பணி பெறும் வாய்ப்பு பறிபோன நிலையில், ‛வீட்டுக்கு ஒருவருக்கு அரசு பணி என்ற சாத்தியமில்லாத வாக்குறுதியை அதிமுக அளித்துள்ளதாகவும்,




உச்சநீதிமன்ற உத்தரவிற்கும், தேர்தல் ஆணைய விதிகளுக்கும் மாறாக சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கையாக இருப்பதால் அதிமுக தேர்தல் அறிக்கையை தடை செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார்.