ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிக அதிவேகமாக பரதி வந்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் குறைய முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள்  மூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

அதன் பின்னர் கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் படிப்படியாக குறையத் துவங்கியது அதனையடுத்து தமிழ்நாடு அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் கடந்த 30 தினங்களுக்கு முன்னர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  அதனைத் தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 9ம் தேதி முதல் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது அதனடிப்படையில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

 

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக ஊரடங்கு காலத்தில் மாவட்டம் முழுவதும் சாலை விபத்துக்கள் மிக குறைவாக இருந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டதிலிருந்து வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன. கடந்த 10 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன குறிப்பாக நேற்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. சாலை விபத்துகளில் இளைஞர்கள் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக அளவில் விபத்துக்கள் மூலமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள் வைக்கக்கூடாது, கோவில், பள்ளிக்கூடம், கடைவீதிகளில், டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படக் கூடாது என்கின்ற உச்சநீதிமன்ற உத்தரவு கடந்த காலங்களில் காற்றில் பறக்கவிடப்பட்டது. அது போல அல்லாமல் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொது மக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் செயல்படுகின்ற டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது மட்டுமன்றி போக்குவரத்து காவல்துறையினர் நகர் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் அதிகளவில் ரோந்து கலை தீவிரப்படுத்த வேண்டும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகன உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்