தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு தென் இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. கேரளாவைச் சேர்ந்த கீர்த்தி இந்த கொரோனா காலத்தில் உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் மொட்டை மாடி கிரிக்கெட் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். என்னுடைய அம்பயர் நைக் உடன் அழகான மாலை நேரம் என கீர்த்தி குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நைக் வேறு யாருமல்ல. அவருடைய செல்ல நாய்க்குட்டி தான். அந்த வீடியோவில் ஓடி வந்து பவுலிங் போடும் கீர்த்தி அங்கு வைக்கப்பட்டுள்ள ஸ்டெம்புகளை சரியாக தகர்த்தெறிகிறார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் நன்றாக கிரிக்கெட் விளையாடுவதாக குறிப்பிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு நீங்கள் ஏன் செல்லக்கூடாது? எனவும் ரசிகர்கள் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகை மேனகா சுரேஷின் மகள் என்பது பலரும் அறிந்ததே. கீர்த்தியின் தந்தையும் ஒரு தயாரிப்பாளர். சினிமா குடும்பத்தில் பிறந்த கீர்த்திக்கும் சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்த நிலையில் 2000மாவது ஆண்டு தனது 8வது வயதில் Pilots என்ற மலையாள திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மூன்று திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்
அதன் பிறகு மலையாளத்தில் அவர் சில சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்த கீர்த்தி, 2014ம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ஏ.எல். விஜயின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக களமிறங்கினார் கீர்த்தி. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரெமோ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. 2017ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படம் கீர்த்தியின் சினிமா அந்தஸ்தை உயர்த்தியது.
கடந்த 2018ம் ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழக்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இறுதியாக கீர்த்தி சுரேஷ் தமிழில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் வெளியான பென்குயின் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே மற்றும் சாணி காகிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.