சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு

அரூர் அருகே குறிப்பிட்ட சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவத்தில் கடையின் உரிமையாளர் தந்தை, மகன் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்வரன் என்பவர், யோகஷ் என்ற பெயரில் முடிதிருத்தம் கடை நடத்தி வருகிறார். யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை கருப்பன் (எ) சின்னையன் இருவரும் பணி செய்து வருகின்றனர்.

Continues below advertisement

முடி வெட்ட மறுப்பு:

இந்நிலையில் நேற்று முன்தினம் கெளாப்பாறை அம்பேத்கர் நகரை சேர்ந்த பட்டியில் சமூக இளைஞர்  சஞ்சய், (17) என்பவர், முடி திருத்தம் செய்ய, கடைக்கு சென்றுள்ளார். அப்போது நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தபோது, யோகேஸ்வரன் நீ எந்த ஊரு என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த இளைஞர் தான் கெளாப்பாறை என்ற தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

பின்பு கடையின் உரிமையாளர் யோகேஸ்வரன், உங்களுக்கு முடி வெட்ட முடியாது, நீ வேறு எங்கேயாவது வெட்டிக்கொள் என்று திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் சஞ்சய் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் ஒன்றிணைந்து, முடி திருத்தம் கடைக்கு சென்று, என்ன காரணத்திற்காக முடி வெட்ட முடியாது என்று சொன்னீர்கள்? என்று கடை உரிமையாளர் யோகேஸ்வரனிடம் கேட்டுள்ளனர். அப்போது யோகேஷ்வரன் உங்களுக்கு(குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்கும் இடத்தை கூறி) முடி வெட்ட முடியாது அவ்வளவுதான் என்று சொல்லி வேறு ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டே இருந்திருக்கிறார்.

வாக்குவாதம்:

பின்பு யோகேஸ்வரன் தந்தை கருப்பன் (எ) சென்னையன், கடைக்கு வரும் பொழுது அவரிடம் இளைஞர்கள் காரணத்தை கேட்டிருக்கிறார்கள். அப்போது உங்களுக்கு இப்போது மட்டுமல்ல காலம் காலமாக முடி வெட்டுவதில்லை தெரிவித்துள்ளார். அப்போது இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அவர் இப்போதும் முடி வெட்ட முடியாது, எப்போதும் முடி வெட்ட முடியாது. நீங்க எங்கு சென்று புகார் செய்தாலும் அதை பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார்.  அப்போது இளைஞர்கள் கருப்பன் (எ) சென்னையனை பார்த்து சமூக நீதி பேசக்கூடிய திமுகவில் இருக்கின்ற நீங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? இதை தான் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கூறினார்களா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. 

தந்தை, மகன் கைது:

அதன் பிறகு நேற்று பாதிக்கப்பட்ட இளைஞர் உள்ளிட்ட அவரது நண்பர்கள் அரூர் காவல் நிலையத்தில்
பாதிக்கப்பட்ட இளைஞர் சஞ்சய், அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து முடிதிருத்தும் கடை உரிமையாளர் யோகேஸ்வரன், மற்றும் இவரது தந்தை  கருப்பன் (எ) சென்னையன், ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்ததால், யோகேஸ்வரன் மற்றும் தந்தை கருப்பன் (எ) சென்னையன் இருவரையும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அரூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் பட்டியல் சமூக இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்த சம்பவம் அரூர் பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பட்டியல் சமூக பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்ததும், மாட்டிறைச்சியை பேருந்தில் எடுத்து வர கூடாது என சாதிய பாகுபாடுகள் காட்டிய சம்பவம் அரூர் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola