குழந்தை பெற்ற மூன்றாவது நாளில், சிபிஎம் தலைவரான தந்தை குழந்தையை கடத்தியதாக சிபிஎம் பேரூர்கடா பகுதி குழு உறுப்பினர் பிஎஸ் ஜெயச்சந்திரனுக்கு எதிராக புகார் அளித்தார் அவரது மகள் அனுபமா. தந்தை ஜெயச்சந்திரன் கூறுகையில், "குழந்தையை பாதுகாக்க முடியாது என்று எழுதிக்கொடுத்ததால், குழந்தையை குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தேன்" என்றார். எனினும், அனுபமா தனது தந்தை பொய் சொன்னதாக கூறுகிறார். DYFI பேரூர்கடா பிராந்திய தலைவராக இருந்த அஜித் மற்றும் SFI பகுதி இணை செயலாளராக இருக்கும் அனுபமா ஆகியோர் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அஜித் தலித் கிறிஸ்தவர் என்பதால் அனுபமா குடும்பம் இவர்கள் உறவை எதிர்த்தது. இதற்கிடையே அனுபமா வயிற்றில் குழந்தை உண்டானது. இதன் மூலம், குடும்பத்தினர் அனுபமாவை அஜித்துடன் பேசவிடாமல் வீட்டில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் அனுபமாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.



பிரசவத்திற்குப் பிறகு மூன்றாவது நாளில், தந்தை மற்றும் குடும்பத்தினர் குழந்தையை அனுபமாவிடம் இருந்து வலுக்கட்டாயமாக கொண்டு சென்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பிறகு குழந்தையை திருப்பி தருவதாக தந்தை கூறியிருக்கிறார். இதற்கிடையில், ஒரு கட்சியின் வழக்கறிஞர் உட்பட இரண்டு பேர், அனுபமாவிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்கினர், அது அவரது சகோதரியின் திருமணத்திற்காக என்று கூறியிருக்கிறார்கள். விவரங்கள் கேட்டபோதும் வேறெதுவும் கூறாமல் மறுதிருக்கிறார்கள். அதே நேரத்தில், அஜித் தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனுபமாவுடன் வசித்து வருகிறார். இருப்பினும், அவரது சகோதரியின் திருமணத்திற்கு பின்னர் பல மாதங்கள் ஆகியும் குழந்தை அனுபமாவுக்குத் திரும்பி தரப்படவில்லை. குழந்தையை மீட்க பல முறை பேரூர்கடா போலீசை அணுகினார், ஆனால் பலனில்லை. கடந்த ஆண்டு அக்டோபரில் குழந்தை நலக் குழுவிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டார்.



அனுபமாவின் தந்தை பி.எஸ்.ஜெயச்சந்திரன் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கட்சியைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்கு வகித்த தலைவர் பேரூர்கடா சதாசிவனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராக சதாசிவன் இருந்தார் என்பதால் ஜெயச்சந்திரன் ஒரு தீவிரமான சிபிஎம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று உறுதிப்படுத்தப்படுகிறது. அவர் தனது மகள் விவகாரதத்திலும் கட்சி தொடர்பை பயன்படுத்தினார். அதிகாரிகளிடம் நியாயம் கிடைக்காததால் அனுபமாவும் அஜித்தும் கட்சியை பலமுறை அணுகினர். இருப்பினும், பதில் நேர்மறையாக இல்லை. சிபிஎம் தலைவர்கள் ஏ விஜயராகவன், கோடியேரி பாலகிருஷ்ணன், பி சதி தேவி மற்றும் ஆனவூர் நாகப்பன் ஆகியோரை சந்தித்து புகார் அளித்தனர். எங்கிருந்தும் நேர்மறையான தலையீடு இல்லை. பின்னர் அவர் ஏகேஜி மையத்தை நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டார், அங்கும் சரியான பதில் இல்லை. இறுதியாக, தேசியத் தலைவர் விருந்தா காரட்டையும் அணுகினர். அவர்கள் மட்டுமே இந்த பிரச்சினையை பரிசீலித்ததாக அனுபமா கூறுகிறார். இறுதியாக, முதல்வர், டிஜிபி மற்றும் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.