புனே நகரின் மூன்று கால்கள் கொண்ட சிறப்பு போலீஸ் அதிகாரி தான் ராஜா! அண்மையில் புனே நகரின் காவல்துறை ஆணையர் அமிதாப் குப்தா ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுருந்தார்.
அதில் "இங்கே பாருங்கள் பலகந்தர்வா சோதனை சாவடியில் மூன்று கால்களுடன் உள்ள ஸ்பெஷல் போலீஸ் ஆபீஸர் ராஜாவை. இந்த ஊரடங்கு காலத்தில் விழிப்பான துணைவனாக, உண்மையான தோழனாக எங்கள் காவல்துறை அதிகாரிகளுடன் இருக்கிறான்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்ததது.
இரண்டு காவல்துறையினர் இரவு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருக்க நடுவே காவல் பணியை செய்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார் ராஜா. இரவுப் பணிக்கு செல்வோர் எப்படி காலையில் தூங்கி, இரவில் கண் விழிப்பார்களோ, அதுபோன்று ஒவ்வொரு இரவும் புனே காவல்துறையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்.
அங்கு காவல் பணியில் உள்ள தலைமை காவலர் ராஜேந்திர பவார் "எங்கிருந்து வந்தான் என தெரியவில்லை ஆனால் எங்கள் அனைவருக்குமே பணியில் உற்ற துணைவனாக இருக்கிறான்" என்கிறார். "எங்கள் அதிகாரிகள் அனைவருடனும் ஒரு உறவு ராஜாவிற்கு ஏற்பட்டுவிட்டது, அவன் அருகில் இல்லை என்றால் ஏதோ ஒன்று தொலைந்தது போல் நாங்கள் உணர்கிறோம்" என்கிறார் மற்றொரு காவல் துறை அதிகாரி.
இந்நிலையில் ட்விட்டரில் காவல் ஆணையர் பகிர்ந்த புகைப்படத்தின் கீழ் பலர் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக எங்கே ராஜா, நலமாக இருக்கிறாரா, அவருக்கு நாங்கள் உணவு அனுப்ப வேண்டும் என்றால் எப்படி அனுப்ப வேண்டும் ? என்பது போன்ற நெகிழ்ச்சியான கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு மறுமொழி அளித்துள்ள புனே காவல் ஆணையர் "ராஜாவின் மீது பலர் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் எங்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. உங்கள் உணர்வுகளை கண்டு, எங்கள் காவல்துறையின் மொத்த அதிகாரிகளும் ராஜா நலமாக இருக்கிறாரா என்பதை அறிய நேரடியாக சென்றோம்" என காவல்துறை அதிகாரிகள் அனைவரும் ராஜாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் நீங்கள் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருங்கள் அதுவரை ராஜாவை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம் எனவும் பதிவிட்டுள்ளார்.
அன்பால் கட்டியமைக்கப்படும் உலகில் அனைவரும் ராஜாக்களே என்பதற்கு இதை விட சிறந்த சான்று ஏதேனும் தேவையா என்ன ?