ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படலாம் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது பிசிசிஐ தனது முடிவை மாற்றிக்கொண்டு, போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய அணி இங்கிலாந்து சென்று நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதுகிறது. அதன் பிறகு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 14ம் தேதி நிறைவடையும் நிலையில், செப்டம்பர் 15ம் தேதி பையோ பப்பிலில் உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து நேரடியாக புறப்பட்டு துபாய் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் பையோ பப்பிலில் இருப்பதால் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, நேரடியாக போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. அதே நேரம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மற்ற வீரர்கள், அணி நிர்வாகிகள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்பே வந்து தனிமைப்படுத்தி கொண்டு பயிற்சிகளை துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஐபிஎல் 2021 தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி துவங்கியது. இதில் மே 3ம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கொல்கத்தா பெங்களூரு அணிகள் இடையேயான போட்டிக்கு முன்பாக, கொல்கத்தா அணியை சேர்ந்த சிலருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் அன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்பு அணியை சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் பலருக்கு கொரோனா பரவியது உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடர் 2021 ஒத்திவைக்கப்படுவதாக மே 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இந்நிலையில் தான் ஐபிஎல் தொடர் 2021ன் மீதமுள்ள 31 போட்டிகளும் செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதி துவங்கி அக்டோபர் 10ம் தேதி அளவில் நிறைவடையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே ரசிகர்கள் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை மீண்டும் கண்டுகளிக்கும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது, மிக விரைவிலேயே இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும், போட்டி அட்டவணையும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.