காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்து வந்த தன் காரணத்தினால் சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாயும் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு ஹெக்டருக்கு 6 ஆயிரம் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.



 

இந்த நிலையில் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் இரண்டாவது முறையாக பெய்த மழையின் காரணமாக மழை நீர் முழுமையாக சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் மழை நீரை வடிய வைப்பதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மழை நீரை வடிய வைத்த பின்னர் உடனடியாக நெல் பயிர்களுக்கு உரம் அடிக்க வேண்டியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடுமையான உர  தட்டுப்பாடு நிலவுவதாகவும் தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதனையடுத்து டெல்டா மாவட்டங்களுக்கு உடனடியாக யூரியா பொட்டாஷ் உரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.



 

அதே நேரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய உரங்களை ஒதுக்கீடு செய்யாததன் காரணமே தற்பொழுது உரத்தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமருக்கு உடனடியாக தமிழ்நாட்டிற்கு உர தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார். அதனடிப்படையில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு தேவையான யூரியா பொட்டாஷ் டிஏபி உள்ளிட்ட உரங்களை கப்பலின் மூலமாக காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பியிருந்தது. அதனையடுத்து திருவாரூர் மாவட்டத்திற்கு 9 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உள்ளிட்ட உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 

மேலும் திருவாரூர் மாவட்டத்திற்கு இதுவரை 700 மெட்ரிக் டன் யூரியா வந்துள்ளதாகவும் மேலும் வாரம்தோறும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து யூரியா பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் எனவும் வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.