பகுஜன் சமாஜ் கட்சி எம்பி குன்வார் டேனிஷ் அலி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். வலிமைமிக்க அரசு மற்றும் அவர்களது கூட்டு முதலாளித்துவ நண்பர்களுக்கு எதிராக போராடி, தியாகம் செய்து, தோற்கடித்த துணிச்சலுக்கு விவசாயிகளை வாழ்த்துகிறேன். மேலும் தாமதிக்காமல், பிரதமர் மோடி சிஏஏவையும் ஆய்வு செய்து நீக்க வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்.
மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட செய்தியை ஜமியத் தலைவர் மௌலானா அர்ஷாத் மதனி பாராட்டினார், மேலும் விவசாயிகளின் வெற்றியை குறிப்பிட்டு பாராட்டினார்.
விவசாயிகள் இயக்கத்தை நசுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது, அதுபோலவே தேசத்தில் நடந்த அனைத்து போராட்டங்களிலும் நசுக்கப்பட்டது என்று மதானி கூறினார். விவசாயிகளை பிளவுபடுத்துவதற்கான சதிகள் உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து அனைத்து வகையான தியாகங்களையும் செய்து தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் ஜமியத் குழு வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது முதல் நாடு முழுவதும் CAA சட்டங்களையும் திரும்பப்பெறக் கோரி கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன.
வேளாண் சட்டங்களைப் போலவே CAA ஐயும் ரத்து செய்ய வேண்டும் என்றும் திரு மதானி கேட்டுக் கொண்டார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் முடிவு ஜனநாயகம் மற்றும் மக்கள் சக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் கூறினார். CAA டிசம்பர் 12, 2019 அன்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனவரி 10, 2020 முதல் அமலுக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் CAA நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்தும் மத துன்புறுத்தல்களால் இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தம். ஏற்கனவே , 11 ஆண்டுகளில் குடியுரிமை பெறலாம் என்று இருந்ததை 5 ஆண்டுகளாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்த சட்டம்.