வெண்ணாற்றில் 5 கிலோமீட்டர் தூரம் வரை ஆகாயத்தாமரை இதுவரை தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்



காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதியில் உள்ள மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் கடந்த  ஆண்டு பாசனத்திற்குரிய ஆறு, வாய்க்கால், வடிகால்களில் தூர்வாரும் பணி என்பது சம்பிரதாயத்திற்காக தொடங்கப்படும் நிகழ்வாக மட்டுமே அமைந்துள்ளது. அதிக மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் சீராக பாய வழியின்றி ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டு வருவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.





இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக சிறப்பு நிதியாக 80 கோடி ரூபாயினை 4 ஆயிரத்து 964 கிலோமீட்டர் தூரத்திற்கு  வாய்க்கால்கள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்டது.குறிப்பாக நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 1200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிக்காக சுமார் ரூ.12 கோடி 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.


மொத்தம் 115 இடங்களில் இந்தத் தூர் வாரும் பணிகள் என்பது நடைபெற்றது. தற்போது வரை மாவட்டம் முழுவதும் 112 இடங்களில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் சிறு-குறு வாய்க்கால்கள் பிரதான ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளது. கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் வரை செல்லும் வெண்ணாற்றில் ஆகாயத்தாமரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை படர்ந்துள்ளது.





இப்பகுதிக்கு தண்ணீர் வந்த நிலையில்  இதுவரை இந்த ஆறு தூர் வாராத காரணத்தினால் கடை மடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடபாதிமங்கலம் பண்டிதகுடி சேகரை சேரி உள்ளிட்ட இருபத்து ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.


இதனால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் .அதேபோன்று திருவாரூர் நகர பகுதி வழியாக கடந்து செல்லும் ஓடம்போக்கி ஆகாயத்தாமரை என்பது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்து காணப்படுகிறது. இந்த ஆற்றையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்து ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வார வேண்டும் என்று நீண்ட நாட்களாக திருவாரூர் நகர மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசு அதிகாாிகள் கவணம் செலுத்தி உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரவேண்டும் என சமூகஆர்வலர்களும்  விவசாயிகளும் அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர் .