தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் திண்டாடும் நிலை தொடர் கதையாக தொடருகிறது. இந்த ஆண்டு மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக மழைநீர் தேங்கும் பிரச்சினை பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல தொடக்கத்தில் தொடர் மழை பெய்த போதிலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டது.ஆனால், கடந்த 25-ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழை தூத்துக்குடி மாநகரத்தின் நிலையை படுமோசமாக்கியது. 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழை காரணமாக மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக வழக்கம் போல் இந்த ஆண்டும் மழைநீரில் மக்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


நவம்பர் 25-ம் தேதிக்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது.370 மோட்டார் பம்புகள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள மழைநீர் ஓரளவுக்கு வடிந்தது. முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், பிரையண்ட் நகர்,ராஜீவ் நகர், கதிர்வேல் நகர், தபால் தந்தி காலனி, நிகிலேசன் நகர் உள்ளிட்ட விரிவாக்கப் பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருந்தது. 




இந்த நிலையில் நேற்று இரவில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நிலமையை மேலும் மோசமாகியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே தண்ணீர் தேங்கி நிற்கும்  முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், பிரையண்ட் நகர், சிதம்பரநகர், ராஜீவ் நகர், கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளில் ஓரளவுக்கு குறைந்திருந்த தண்ணீர் மீண்டும் அதிகரித்துள்ளது.




இதனால் இந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் பகுதிகளில் தெருக்களில் வீடுகளை சூழந்து இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடந்த 6 தினங்களாக வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, மழை நீர் தேங்காத பகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் மழைநீரில் பாம்பு, பூரான் போன்ற விஷ சந்துக்கள் வீடுகளுக்குள் வந்து விடுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வழக்கமாக இந்த பகுதியில் குறைந்த அளவில் மழைநீர் தேங்கிய உடனேயே மோட்டார் பம்ப் அமைத்து வெளியேற்றிவிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு இந்த பகுதியில் இதுவரை மோட்டார் பம்புகள் அமைக்கவில்லை. மேலும், இப்பகுதியில் அமைக்கப்பட்ட பம்பிங் ஸ்டேசனில் உள்ள மோட்டாரும் ஓடவில்லை. கடந்த 7 நாட்களாக தண்ணீரில் தத்தளிக்கிறோம் என்கின்றனர்.




முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் பேருந்துகளை பழுது பார்த்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் ஒரு வாரமாக தடைபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் வழியாக செல்லும் வாகனங்கள் குழிகளில் சிக்கி கொள்ளும் பரிதாப நிலை காணப்படுகிறது. 




இதேபோல் பிரையண்ட் நகர், சிதம்பர நகர், லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம், கால்டுவெல் காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் மீண்டும் தேங்கி மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் நேற்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் அங்கு விரைந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் தூத்துக்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் மக்கள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேசி அவர்களை சமாதான படுத்தினர்.




தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 1 எச்பி திறன் கொண்ட 50  சிறிய கையடக்க மோட்டார்களும், 30 முதல் 40 எச்பி திறன் கொண்ட 10 ராட்சத மோட்டார்களும் கோவையில் இருந்து வாங்கி வரப்பட்டுள்ளன. பெரிய மோட்டார்கள் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும்.


மேலும், சிறிய மோட்டார்கள் பொதுமக்களுக்கு தற்காலிக அடிப்படையில் வாடகையின்றி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த மோட்டார்களை வாங்கி தங்கள் வீடுகளுக்கு உள்ளே மற்றும் வீட்டு வளாகத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விபரம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு காவல் துறை உதவி ஆய்வாளரால் கண்காணிக்கப்படும். தண்ணீரை வெளியேற்றும் பணிகள் முடிந்ததும் மோட்டாரை மாநகராட்சியிடம் திரும்ப கொடுத்துவிட வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.